WTC 2025 Points Table Updated: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான, 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்த இந்தியா:
சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட், 3-1 என ஆஸ்திரேலியே கைப்பற்றியது. சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வசப்படுத்தியுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வரும்ஜூலை 11-15 க்கு இடையில், லார்ட்ஸில் நடைபெறும் WTC 2025 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சந்திக்கும்.
WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா:
அதேநேரம், இந்திய அணி சிட்னி டெஸ்ட் தோல்வியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. முன்னதாக, கடந்த 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நடைபெற்ற, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, முதல்முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டிக்கு கூட இந்திய அணி தகுதி பெறவில்லை. 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான சுழற்சியில் 9 வெற்றிகள், 8 தோல்வி மற்றும் 2 டிராக்களுடன், வெற்றி சதவிகிதம் 52.77 லிருந்து 50.00 ஆகக் குறைந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிப்பட்டியல்:
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | ட்ரா | புள்ளிகள் | PCT |
தென்னாப்பிரிக்கா (கே) | 11 | 7 | 3 | 1 | 88 | 66.67 |
ஆஸ்திரேலியா (கே) | 17 | 11 | 4 | 2 | 130 | 63.72 |
இந்தியா | 19 | 9 | 8 | 2 | 114 | 50.00 |
நியூசிலாந்து | 14 | 7 | 7 | 0 | 81 | 48.21 |
இலங்கை | 11 | 5 | 6 | 0 | 60 | 45.45 |
இங்கிலாந்து | 22 | 11 | 10 | 1 | 114 | 43.18 |
பங்களாதேஷ் | 12 | 4 | 8 | 0 | 45 | 31.25 |
பாகிஸ்தான் | 11 | 4 | 7 | 0 | 40 | 30.30 |
வெஸ்ட் இண்டீஸ் | 11 | 2 | 7 | 2 | 32 | 24.24 |
புரட்டிப்போட்ட நியூசிலாந்து தொடர்:
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான சுழற்சியில் இந்திய அணி, கடந்த ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது. நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு முன்பு வரை, இந்திய அணி 8 வெற்றிகள் பெற்று இருந்த நிலையில், 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி கண்டு இருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி, இந்தியா இறுத்ப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக இந்திய அணி, சொந்த ரசிகர்களுக்கு முன்பே தொடரை 3-0 என இழந்து ஒயிட் வாஷ் ஆனது. அதைதொடர்ந்து, ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக தொடங்கினாலும், 3-1 என தொடரை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறும் கனவு தவிடுபொடியாகியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இடம்பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தனையும் தற்போது தலைகீழாக மாறியுள்ளது.