மகளிர் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் சீசனைப் போல் இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவேண்டும்.
இந்நிலையில் இந்த சீசனின் இரண்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யு.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ,யு.பி. வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் எதிர்பார்த்ததைப் போல் சிறப்பாக அமையவில்லை. அணியின் ஸ்கோர் 13 ரன்களாக இருந்தபோது ஷோஃபி டிவைன், 36 ரன்களில் இருந்த போது ஸ்மிருதி மந்தனா மற்றும் 54 ரன்களில் எல்லீஸ் பெரி ஆகியோர் தங்களது விக்கெட்டினை இழந்தனர். இதனால் அணியின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. ஆனால் அதன் பின்னர் கைகோர்த்த மேக்னா மற்றும் ரிச்சி கோஷ் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்த மீட்டனர். மேக்னா அரைசதம் கடந்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
ஆனால் மேக்னாவுக்குப் பின்னர் வந்த ஜார்ஜியா டக் அவுட் ஆகி வெளியேறியதால் பெங்களூரு அணி மீண்டும் சரிவினைச் சந்தித்தது. பெங்களூரு அணி சார்பில் மேக்னா 53 ரன்களும் ரிச்சா கோஷ் 62 ரன்களும் சேர்த்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது.
யு.பி. வாரியர்ஸ் அணியின் சார்பில் ராஜேஷ்வரி ஜெய்க்வாட் 2 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா, ஷோபி எக்கல்ஸ்டன், தாலியா மெக்ராத் மற்றும் கிரேஸ் ஹாரீஸ் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பெங்களூரு அணி சார்பில் ஷோபி டிவைன் ஒரு ரன்னும், ஸ்மிருதி மந்தனா 13 ரன்களும், மேக்னா 53 ரன்களும், எல்லீஸ் பெர்ரி 8 ரன்களும், ரிச்சா கோஷ் 62 ரன்களும், ஷோபி மோலிநக்ஸ் 9 ரன்களும் மற்றும் ஸ்ரேயங்கா பட்டீல் 8 ரன்களும் சேர்த்தனர்.