அதிரடி மன்னன் மேக்ஸ்வெல்:
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த முறை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க போட்டியாக இருந்தது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் தான்.
தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலிய அணியை தனி ஒரு ஆளாக இருந்து மீட்டார். அவரது ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச்செய்தார். அதன்படி, ஆறாவது வீரராக அந்த அணியில் களமிறங்கிய இவர் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என மொத்தம் 201 ரன்களை குவித்தார். இதனால், இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் மேக்ஸ்வெல்லை பாராட்டினார்கள். ரசிகர்களும் அவரை கொண்டாடினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டம் அது.
நடக்க முடியாத வரை விளையாடுவேன்:
முன்னதாக, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( பஞ்சாப் கிங்ஸ்), டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளார். இதனிடையே 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அது குறித்து கிளென் மேக்ஸ்வெல் பேசியுள்ளார்.
அதில், “நான் விளையாடப் போகும் கடைசி தொடராக ஐபிஎல் இருக்கலாம். என் கால்கள் ஓயும் வரை ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவேன். ஏனெனில் என்னுடைய கேரியர் முழுவதும் ஐபிஎல் நிறைய நல்ல மாற்றங்களை கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன். அதில் நான் சந்தித்த நபர்களும், பயிற்சியாளர்களும், சர்வதேச வீரர்களும் என்னுடைய கேரியரில் சிறந்து விளங்குவதற்கு எப்படி உதவினார்கள் என்பதை திரும்பிப் பார்க்கிறேன்.
குறிப்பாக 2 மாதங்கள் நீங்கள் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் போன்ற மகத்தான வீரர்களின் தோள் மீது கை போட்டு விளையாடும் வாய்ப்பையும் அவர்களுடன் சேர்ந்து மற்ற போட்டிகளைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பையும் பெறுகிறீர்கள். எந்த வீரர்களிடம் நீங்கள் கேட்டாலும் இது நல்ல அனுபவமாக இருக்கும் என்று சொல்வார்கள்.
எனவே வரும் காலங்களில் இன்னும் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி ஏறத்தாழ வெஸ்ட் இண்டீஸ் போல இங்குள்ள சுழலுக்கு சாதகமான காய்ந்த சூழ்நிலைகளில் எப்படி அசத்தலாம் என்பதை கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் மேக்ஸ்வெல்.