WI Vs AUS Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. கப்பா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 216 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேற்கிந்திய தீவுகள் சார்பில் சமர் ஜொசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-1 என சமன் செய்துள்ளது. அதோடு, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில், மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா பயணம்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தான், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, பிரபல கப்பா மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 311 ரன்களை சேர்த்தது. ஜோஸ்வா டி சில்வா 79 ரன்களை சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை சேர்த்து இருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக டிக்ளேர் செய்தது. கவாஜா 75 ரன்களை சேர்க்க, அல்ஜார் ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 22 ரன்கள் முன்னிலையுடன் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி:
இரண்டாவது இன்னிங்ஸில் ஹேசல்வுட் மற்றும் நாதன் லயனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. மெக்கன்ஸி மட்டுமே அதிகபட்சமாக 41 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து , 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால், சமர் ஜோசப்பின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிரட்டிய சமர் ஜோசப்:
அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சமர் ஜோசப் 11.5 ஓவர்களை வீசி, 68 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில், கேமரூன் கிரீன், ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் நதன் லயன் ஆகிய 7 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக, இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது, மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் சமர் ஜோசப் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால், 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு அவர் வித்திட்டுள்ளார்.