இந்திய டெஸ்ட் அணியின் நிலைமையை கண்டு ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் வேதனையுடன் உள்ளனர். பயிற்சியாளர், கேப்டன்சி, வீரர்கள் ஆடும் விதம் என அனைத்திலும் இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் அதிருப்திகரமாக உள்ளது. 

Continues below advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டை சுமந்த கோலி:

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டை தனது தோள்களில் சுமந்த பெருமை விராட் கோலிக்கு உண்டு. குறிப்பாக. ஒரு டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியைப் போல ஒரு கேப்டன் இதுவரை இந்திய அணிக்கு இருந்ததே இல்லை என்பதை வரலாறு சொல்கிறது.

சுமார் 82 ஆண்டுகாலமாக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது. இதில் விராட் கோலி கேப்டனாக இந்திய அணிக்கு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இந்திய அணி வெறும் 38 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே வெளிநாட்டில் வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றியிலும் 6 வெற்றி வங்கதேசத்திலும், 3 வெற்றி ஜிம்பாப்வே நாட்டிலும் கிடைத்தது. 3 வெற்றி 1967- 68 காலத்தில் நியூசிலாந்தில் கிடைத்தது.  1977-78ல் ஆஸ்திரேலியாவில் 2 கிடைத்தது. 

Continues below advertisement

கேப்டன் என்றால் கோலிதான்:

விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியை கையில் எடுத்த பிறகு இந்தியா வெளிநாட்டு மண்ணில் மட்டும் 16 போட்டிகளில் அவரது தலைமையில் வென்று காட்டியது. இது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும். விராட் கோலி இல்லாத தருணத்தில் கேப்டன்சி செய்த ரஹானே தலைமையிலும் வெளிநாட்டு மண்ணில் 2 வெற்றியை இந்திய அணி எட்டியது. 

இந்த வெற்றிகள் ஏதும் சாதாரண அணிகளுக்கு எதிராக கிடைத்துவிடவில்லை. இந்த 16 வெற்றியில் 5 இலங்கைக்கு எதிராக 2015, 2017ம் ஆண்டு கிடைத்தது. அப்போது இலங்கை அணி வலுவாகவே இருந்தது. அந்த சமயம் இலங்கை 2016ம் ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-0 என்றும், 2016ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கணக்கிலும், 2018ம் ஆண்டு பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தினர். 

11 டெஸ்ட் தொடர்கள்:

எஞ்சிய வெற்றிகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற ஜாம்பவான் அணிகளுக்கு எதிராக விராட் கோலி பெற்றுத் தந்தார். 2012-13ம் ஆண்டு முதல் 2024-25ம் ஆண்டு வரை இந்திய அணி 18 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இதில் விராட் கோலி 11 டெஸ்ட் தொடர்களுக்கு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். ரஹானே ஒரு தொடருக்கு கேப்டனாக இருந்தார். 

குறிப்பாக, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலே 60 ஓவர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்த நிலையில் தனது அபாரமான கேப்டன்சியால் இந்திய அணியை வெற்றி பெற வைப்பார். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு மட்டும் 7 இரட்டை சதங்களை டெஸ்டில் விளாசினார்.

மிரட்டிய இந்திய அணி:

இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர், பும்ரா, முகமது ஷமி, முகது சிராஜ் என வேகப்பந்துவீச்சில் மிரட்டுவதற்கு என்றே ஒரு தனிப்படையே வைத்திருப்பார். சுழலில் அஸ்வின், ஜடேஜா மிரட்டுவதுடன் பேட்டிங்கிலும் அசத்துவார்கள். ரோகித், கே.எல்.ராகுல். விராட் கோலி, ரஹானே, புஜாரா என டாப் ஆர்டரும் மிகவும் வலுவாக இருந்தது. 

உலகக்கோப்பையும், ஐபிஎல் கோப்பையும் இல்லாததால் மோசமான கேப்டன் என்று அவரை விமர்சித்து அவரிடம் இருந்து கேப்டன்சியையும் பறித்தது பிசிசிஐ. கம்பீர் - அகர்கர் சூழ்ச்சியில் டெஸ்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார் கோலி. 

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் கதிதான்?

இந்திய அணிக்கு விராட் கோலி போல மீண்டும் ஒரு வீரர் என்பது மிக மிக அரிதான ஒன்றாகும். ஆனால், அப்படி ஒரு வீரர் உருவானால் மட்டுமே இந்திய அணி தனது பழைய பலத்திற்கு திரும்ப முடியும். இல்லாவிட்டால் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் தற்போதைய நிலை இந்தியாவிற்கும் ஏற்படும் என்பது உறுதி.

டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமின்றி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விராட் கோலி தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக வெற்றியை தன்வசம் வைத்துள்ள இந்திய கேப்டனாகவும் விராட் கோலி திகழ்ந்துள்ளார். கேப்டன்சி பேட்டிங்கை பாதிக்காத வகையில் விளையாடிய தலைசிறந்த பேட்ஸ்மேனும் விராட் கோலி ஆவார்.