Virat Kohli Test Records: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி படைத்துள்ள பல அரிய சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

டெஸ்டில் விராட் கோலி ஓய்வு:

எல்லா காலத்திற்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விராட் கோலி கொண்டாடப்படுகிறார். ஆனால், அண்மைக்காலமாக அவர் ரன்களை சேர்க்க தடுமாறி வந்தார். இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆண்டு, உள்ளூரில் இந்திய அணி நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்ததற்கு கோலி பேட்டிங்கில் சொதப்பியதும் ஒரு முக்கிய காரணம். அதன்பிறகு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும், முதல் போட்டியில் மட்டுமே சதமடித்தார். அதன்பிறகு பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில் தான், கேப்டன் ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்டில் விராட் கோலியின் சாதனைகள்:

சேஸ் மாஸ்டர் மற்றும் கிங் கோலி என்று வர்ணிக்கப்படும் கோலி, வீரராகவும், அணியின் கேப்டனாகவும் பல்வேறு தகர்க்க முடியாத சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி, 

  • 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து 230 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், டெண்டுல்கர், டிராவிட் மற்றும் கவாஸ்கரை தொடர்ந்து, இந்திய அணிக்காக டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக கோலி திகழ்கிறார்.
  • டெஸ்ட் போட்டிகளில் 7 இரட்டை சதங்களை விளாசி, வேறு எந்தவொரு இந்திய வீரரும் நிகழ்த்தாத சாதனையை தன் வசம் வைத்துள்ளார்
  • ஒரு சீரிஸில் அதிக சதங்களை விளாசியவர் என்ற பட்டியலில் நான்காவது இடத்தில் கோலி உள்ளார். 2016-17ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 4 சதங்களை விளாசியுள்ளார்.
  • 2016-17ம் ஆண்டில், 4 அடுத்தடுத்த தொடர்களில் 4 இரட்டை சதங்களை விளாசி, இந்த சாதனையை நிகழ்த்டிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்
  • டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 700 ரன்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில், சச்சின் மற்றும் சேவாக்கை தொடர்ந்து, கோலி 81 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டினார்

கேப்டன் விராட் கோலியின் சாதனைகள்:

  • கேப்டனாக இந்திய அணியை அதிக போட்டிகளில் வழிநடத்திய பெருமை கோலியையே சேரும். 68 போட்டிகளில் கோலி முதலிடம் வகிக்க, 60 போட்டிகளுடன் தோனி இரண்டாவது இடம் வகிக்கிறார்.
  • டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி சதவிகிதம் கொண்ட கேப்டனாக கோலி திகழ்கிறார். 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 48 போட்டிகளில் வென்று 58.82 எனும் வெற்றி சதவிகிதத்தை பெற்றுள்ளார்.
  • இந்திய கேப்டனாக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பட்டியலில், 20 சதங்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். கவாஸ்கர் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
  • 71 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக 2018-19ம் ஆண்டு சீசனில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களது மண்ணிலேயே 2-1 என வென்ற முதல் இந்திய கேப்டன் கோலி ஆவார்
  • SENA எனப்படும் தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் டெஸ்ட் தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் கோலி ஆவார்
  • இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையும் கோலிக்கு உண்டு. 60 போட்டிகளில் 20 சதங்கள், 18 அரைசதங்கள் உட்பட 5 ஆயிரத்து 864 ரன்கள் விளாசியுள்ளார்
  • இந்திய அணியை சர்வதேச டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றியதோடு, முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலேயே இந்தியாவை இறுதிப்போட்டிக்கு கோலி வழிநடத்தினார்

டெஸ்டில் ஓய்வு ஏன்

அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரின் மூலம், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுகள் தொடர்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த போட்டிகள் நீடிக்கும். இதனை கருத்தில் கொண்டே எதிர்கால தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். அதே காரணத்தால் தான், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.