டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி இன்று நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி இந்தப் போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. 


 


இந்நிலையில் இந்தப் போட்டியில் 64 ரன்கள் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் முறியடித்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இவர் சச்சின் டெண்டுல்கர் அடித்து இருந்த 3300 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் 3350 ரன்கள் விளாசியுள்ளார். 84 இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 3300 ரன்களை விராட் கோலி தாண்டியுள்ளார். 


 






அந்நிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்:


 


விராட் கோலி- 3350* ரன்கள்- ஆஸ்திரேலியா 


சச்சின் டெண்டுல்கர்-3300 ரன்கள் - ஆஸ்திரேலியா 


சச்சின் டெண்டுல்கர்- 686 ரன்கள் - இலங்கை 


ராகுல் டிராவிட் - 2645 ரன்கள் - இங்கிலாந்து 


சச்சின் டெண்டுல்கர்- 2626 ரன்கள்- இங்கிலாந்து 


 


மேலும் இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை இவர் சமன் செய்துள்ளார். அதாவது ஐசிசி தொடர் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்தியர் என்ற சாதனையை கோலி சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் ஐசிசி தொடர் போட்டிகளில் 10 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர். கோலி நடப்பு டி20 உலகக் கோப்பை இன்னும் ஒரு முறை ஆட்டநாயகன் விருதை வெல்லும் பட்சத்தில் இவர் அதிக முறை ஐசிசி தொடர்களில் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்தியர் என்ற புதிய சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஐசிசி தொடர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்தியர்கள்:


சச்சின் டெண்டுல்கர்-10 


விராட் கோலி-10*


டி20 உலககோப்பையில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற அரிய சாதனையை விராட்கோலி இன்றைய போட்டியில் படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் 16 ரன்களை எடுத்தபோது இந்த அரிய சாதனையை படைத்தார். உலககோப்பை டி20 தொடரில் இதற்கு முன்பு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது, விராட்கோலி அவரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.


விராட்கோலி 113 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 35 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 891 ரன்கள் எடுத்துள்ளார். இது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் 8,074 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 12,344 ரன்களும் விளாசியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் 5 சதங்கள், 44 அரைசதங்களுடன் 6 ஆயிரத்து 624 ரன்களை விளாசியுள்ளார்.