Virat Kohli Retirement: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு, 2020ம் ஆண்டு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஓய்வை அறிவித்த கோலி:

யாரும் எதிர்பாராத விதமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுற்று தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கோலி தனது முடிவை அறிவித்துள்ளார். கடந்த தசாப்தத்தின் ஆகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆக கோலி தனது பயணத்தை முடித்தாலும், எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என்ற உச்சகட்டத்தை கோலி சற்றே தவறிவிட்டுள்ளார் என்பதே உண்மை. இந்த மிகப்பெரிய ஏமாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்டது. அதிலிருந்து டெஸ்ட் போட்டியில் கோலி பெரும் சரிவையே பதிவு செய்தார்.

கோலி கண்ட சரிவு:

கொரோனா காலகட்டத்தில் விராட் கோலி யாருமே எதிர்பாராத அளவிற்கு பேட்டிங்கில் மோசமான ஃபார்மை எட்டினார். 2014ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளில் கோலோச்சி வந்த அவர், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்துவீசினால் கோலி ஆட்டமிழப்பார் என்ற சூத்திரத்தால் எதிரணிகளிடம் மீண்டும் மீண்டும் விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைதொடர்ந்து, ஓய்வை அறிவிக்கும் வரையில் கூட கோலிக்கு அது மிகப்பெரும் ஆபத்தாகவே தொடர்ந்தது.

டாப் டூ பாட்டம்:

2014-19 ஆண்டு காலத்தில் கோலி 58.71 என்ற சராசரீயில் 5 ஆயிரத்து 695 ரன்களை குவித்தார். இதனால், டெஸ்ட் போட்டிகளில் ஃபேப் போர் என குறிப்பிடப்பட்ட நான்கு பேர்களில், ஆகச்சிறந்தவர்கள் யார் என்பதில் கோலி மற்றும் ஸ்மித் இடையே கடும் போட்டி நிலவியது.  ஆனால், 2020ம் ஆண்டு தொடங்கிய சரிவால், ஃபேப் ஃபோர் வீரர்களின் பட்டியலில் ஜோ ரூட் மற்றும் கேன் விலியம்சனை காட்டிலும் கீழே சென்று நான்காவது இடத்திற்கு சரிந்தார். ஆனால், ஸ்மித் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

எங்கே தொடங்கியது?

கொரோன பாதிப்புக்கு முன்பாக இந்தியா நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கிரீன் பிட்சை கையாள முடியாமல் திணறிய இந்தியாவை , கேப்டன் கோலியால் கூட காப்பாற்றமுடியவில்லை. 2 போட்டிகளிலும் சேர்த்து கோலி 38 ரன்கள் மட்டுமே சேர்க்க, இந்திய அணி 2-0 என தொடரை இழந்தது. இதுவே கோலியின் சரிவிற்கான தொடக்கப்புள்ளியாகும். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்த பிறகு, பார்டர் கவாஸ்கர் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது. முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 74 ரன்கள் மற்றும் 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த போட்டியோடு, தனிப்பட்ட காரணங்களால் கோலி அந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

மீளமுடியாத சரிவு?

இந்த ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வருவது என்பது கோலிக்கு பெரும் சவாலாக மாறிப்போனது. ரன் மெஷின் என வர்ணிக்கப்படும் கோலியின், டெஸ்ட் சதத்திற்கான காத்திருப்பு நீண்டு கொண்டே சென்றது. நல்ல தொடக்கம் கிடைத்து, அரைசதம் விளாசியும் கூட அவரால் சதத்தை எட்டமுடியாமல் போனது. இந்த காலகட்டத்தில் 20 போட்டிகளில் 6 அரைசதங்களை விளாசியும் சதம் என்பது கிடைக்காமலே இருந்தது. இந்த காலகட்டத்தில் கோலியின் சராசரி கடும் வீழ்ச்சி கண்டது. 26.20 என்ற சராசரியில் வெறும் 917 ரன்களை மட்டுமே சேர்த்து இருந்தார்.  ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட சுழற்பந்துகளை அடிக்க முயன்று விக்கெட்டுகளை வாரிக்கொடுத்தார். தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான கேப்டவுன் போட்டியில் தனியாக போராடி 74 ரன்கள் சேர்த்தபோதும், அதே பாணியில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த டெஸ்ட் போட்டியில் தான் அவர் கடைசியாக கேப்டனாக செயல்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்தும் சோபிக்காத கோலி:

ஆயிரத்து 205 நாள் காத்திருப்புக்குப் பிறகு, 2023ம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 28வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான அந்த மைதானத்தை முற்றிலுமாக பயன்படுத்தி 186 ரன்களை விளாசினார். இதனால் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் 2023 முதல் கோலி 3 சதங்களை மட்டுமே விளாசியுள்ளார். 40-க்கும் குறைவாக சரிந்த அவரது சராசரியுடன், 19 போட்டிகளில் ஆயிரத்து 1111 ரன்களை மட்டுமே விளாசியுள்ளார்.

ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்படும் பந்துகளை அடியக்க முயன்று, ஸ்லிப் அல்லது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாவது கோலிக்கு வழக்கமாகிவிட்டது. இந்த பிரச்னைக்கு நான்கு ஆண்டுகளாகியும் தீர்வு காண முடியாமல் கோலி தவித்தது, இந்திய அணிக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. அதன் விளைவாகவே இன்று கோலி தனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் போட்டிகளில் இருந்து, யாரும் எதிர்பாராத விதமாக ஓய்வு அறிவித்துள்ளார்.

விராட் கோலி G.O.A.T. இல்லையா?

விராட் கோலி கடந்த தசாப்தத்தின் ஆகச்சிறந்த வீரர் தான், ஆனால் எல்லா காலத்திற்கும் சிறந்த வீரரா? என கேட்டால், இல்லை என்று தரவுகள் தெரிவிக்கலாம். அதேநேரம், தரவுகள் மட்டுமே கிரிக்கெட் ஆகிவிடாது. டெஸ்ட் போட்டிகளை எல்லாம் யார் பார்ப்பார்கள் என்ற காலம் உருவாகி, அழிவின் விளிம்பில் இருந்த அந்த ஃபார்மெட்டிற்கு உயிர் கொடுத்ததில் கோலிக்கு முக்கிய பங்கு உண்டு. அவரது ஆக்ரோஷம் ஒட்டுமொத்த இந்திய அணிக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்தது. ட்ராவை இலக்காக கொண்ட இந்திய அணிக்கு, வெற்றி தான் நமது இலக்கு என புதிய பாதையை அமைத்துக்கொடுத்தார். SENA  நாடுகளிலும் நம்மால் டெஸ்ட் தொடர்களை வெல்ல முடியும் என நிரூபித்தார். நவீன டி20 கிரிக்கெட்டால் சரிந்து கிடந்த டெஸ்ட் கிரிக்கெட், இன்று மீண்டும் சுவாரஸ்யமாகவும், ரசிகர்களால் விரும்பப்படுவதாகவும் உருவெடுத்து இருப்பதற்கு கோலி அளப்பரிய பங்காற்றியுள்ளார். நீ கொடுத்தால் நான் அதை திருப்பிக் கொடுப்பேன் என்ற பாணியில் இந்திய அணியை பயமறியாததாக மாற்றியமைத்தார். எனவே கிரிக்கெட் இருக்கும்வரை கோலி என்றுமே The Greartest Of ALL Time ( The G.O.A.T. ) ஆக கொண்டாடப்படுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.