டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி இன்று நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி இந்தப் போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
இந்நிலையில் விராட் கோலிக்கும் அடிலெய்ட் மைதானத்திற்கான தொடர்பும் பந்தமும் என்ன?
இந்திய அணியின் வீரர் விராட் கோலி எப்போதும் ஆஸ்திரேலியாவில் அதிகமாக ரன்கள் சேர்ப்பதில் வல்லவர். அதிலும் குறிப்பாக அடிலெய்ட் மைதானம் இவருக்கும் மிகவும் சாதகமான மைதானங்களில் ஒன்று. 2012 முதல் தற்போது வரை எப்போதும் அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த மைதானத்தில் அவருடைய சிறப்பான இன்னிங்ஸ்கள் என்னென்ன தெரியுமா?
2012:116 vs ஆஸ்திரேலியா:
2012 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். அந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி 116 ரன்கள் எடுத்தார். இது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இவருடைய முதல் சதம்.
2014: 115 & 141 vs ஆஸ்திரேலியா:
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக களமிறங்கினார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 115 ரன்கள் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மீண்டும் ஒரு சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்கள் அடித்து கிட்டதட்ட இந்தியாவை வெற்றிக்கு அருகே அழைத்து சென்று இருந்தார். இருப்பினும் இந்திய அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது.
2015: 107 vs பாகிஸ்தான் (உலகக் கோப்பை):
2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 107 ரன்கள் விளாசினார்.
2019: 104 vs ஆஸ்திரேலியா:
2019 ஆம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் இவர் 104 ரன்கள் விளாசினார்.
இப்படி அடிலெய்ட் மைதானத்தில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி தன் வசம் வைத்துள்ளார். இவர் இந்த மைதானத்தில் 5 சதம் விளாசியுள்ளார். அத்துடன் 3 அரைசதங்களையும் விளாசியுள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு சிறப்பானதாகவே அமைந்துள்ளது. அது இன்றைய போட்டியிலும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.