இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடும் கோலி, ஒருநாள் போட்டிகளில் 49-வது சதத்தை விளாசியுள்ளார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.


உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


முன்னதாக, இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கியது. 


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இதில், 24 பந்துகள் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அதன்படி, 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என மொத்தம் 40 ரன்களை விளாசினார். அதேபோல், மற்றொரு புறம் சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


 


எதிர்பார்ப்புகளுடன் களம் கண்ட விராட்:


 


கடந்த போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி அந்த போட்டியில் சதத்தை தவற விட்டார். இந்நிலையில், இன்றைய போட்டியில் சதம் அடித்து அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


அதேபோல், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கினார் விராட் கோலி. எப்படியும் இந்த போட்டியில் சதம் அடித்து விட வேண்டும் என்று மிக பொறுமையுடன் விளையாடினார். அதன்படி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் மொத்தம் 121 பந்துகள் களத்தில் நின்று 10 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 101* ரன்களை குவித்தார். முன்னதாக அவர் 4 சதங்களை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.


 


சச்சின் சாதனையை சமன் செய்த கோலி:


கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை விளையாடிய சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 49 சதங்களை விளாசி உள்ளார். இந்த சாதனையை நெருங்கி வந்த இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி இந்த உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் கண்டிப்பாக சச்சினின் சாதனை முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்தை பதிவு செய்து வந்தனர்.


அதேபோல், ஒரு சில வீரர்கள் கோலி தன்னுடைய 35-வது பிறந்த நாளில் 49 வது சதத்தை பூர்த்தி செய்வார் என்றும், உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் 50-வது சதத்தை அடித்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்றும் சில வீரர்கள் கூறினர். அதேபோல் இன்றைய போட்டியில் சதம் அடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை கோலி பூர்த்தி செய்துள்ளார்.


 


பிறந்த நாள் பரிசு:


விராட் கோலி இன்று (நவம்பர் 5) அடித்த சதம் அவருடைய ரசிகர்களுக்கு அவர் கொடுத்த பிறந்த நாள் ட்ரீட்டாக அமைந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.