விராட் கோலி பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்தியாவுக்காக அனைத்து வடிவங்களிலும் 75 சதங்கள் அடித்துள்ளார். மேலும் உலக கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக சதம் அடித்த வீரராக உள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள நிலையில், 15 வருட வாழ்க்கையில் 498 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரை பற்றி கூறக்கூடிய ஒரே ஒரு குறை முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவது தான். குறிப்பாக ஐசிசி இறுதிப்போட்டிகளில் அவரது பங்களிப்பு மிகவும் குறைவு என்பது தான் புள்ளி விவரங்கள் கூறுவது.


ஐசிசி மற்றும் பிற நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி


விராட் கோலி அனைத்து வடிவங்களிலும் 20 ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் இதுவரை 23 இன்னிங்ஸ்களில் 746 ரன்கள் எடுத்துள்ளார். அரையிறுதியில் 94 என்ற சராசரியுடன் 120 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடியுள்ளார். கோஹ்லி இதுவரை 6 ஐசிசி இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது ஆடிக்கொண்டிருப்பது 7 வது போட்டி ஆகும். இதில் மொத்தம் 31 என்ற சராசரியில் 343 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார்.



WTC இறுதிப் போட்டியில் கோஹ்லியின் ரன்கள்


WTC இறுதிப் போட்டியில், கோஹ்லி தொடர்ந்து ஏமாற்றமளித்து வருகிறார். அவர் 3 இன்னிங்ஸ்களில் 23.7 சராசரியுடன் 71 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், அவரது அதிகபட்சம் வெறும் 44 என்பது குறிப்பிடத்தக்க விஷயம். வரும் இரண்டாவது இன்னிங்ஸ்-இல் என்ன செய்கிறார் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.


தொடர்புடைய செய்திகள்: WTC Final: 120 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா இந்தியா?.. ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சேஸிங் சாதனை தெரியுமா..!


டி20 இறுதிப் போட்டியில் கோஹ்லியின் ரன்கள்


இதுவரை கோலி வந்த பிறகு இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே டி 20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஆனால் அதுதான் கோலியின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்வில் இதுவரை சிறப்பாக ஆடிய இறுதிப்போட்டி. 2014 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் விராட் கோலி 77 ரன்கள் குவித்த போதிலும், இந்திய அணி தோல்வியை தழுவியது. 



ஒருநாள் போட்டியின் இறுதிப் போட்டியில் கோலியின் ரன்கள்


ஒருநாள் இறுதிப் போட்டியிலும் கோலியின் ஆட்டம் சரியாக அமையவில்லை. அவர் தனது அனைத்து முக்கிய ODI இறுதிப் போட்டிகளிலும் 8 இன்னிங்ஸ்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய சராசரி 22 மட்டுமே. 2017 சாம்பியன்ஸ் டிராஃபிதான் அவர் கடைசியாக ஆடிய ODI இறுதிப் போட்டி. பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியில் அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2013 சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய போது, ஓரளவு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் அவர் 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியை இந்தியா போட்டியை வென்றிருந்தது.