கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சந்திக்காத விமர்சனம் இல்லை. சர்வதேச போட்டிகள் தொடங்கி ஐ.பி.எல் போட்டி வரை அவரால் கண்ணில் ஒத்திக் கொள்ளும் படியான ஒரு ஆட்டத்தினை வெளிப்படுத்தவே முடியவில்லை. இதனால் கிரிக்கெட் உலகில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமில்லாது, அவரது ரசிகர்களாலே பெரிதும் விமர்சிக்கப்பட்டார். 


அவர் களமிறங்கிய போட்டிகளில் அவரே எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்து வெளியேறும் போது ஏமாற்றத்துடனான சிரிப்புடன் எல்லாம் வெளியேறியுள்ளார். அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு அவர் கொடுத்த விலை இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது.  விராட் கோலி இந்த முடிவை அவராக எடுக்கவில்லை. அவர் மீது வைக்கப்பட்ட விமர்சங்களும் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களினால் அந்த முடிவினை எடுத்து இருந்தார். 


அதன் பின்னர் தனது, ஆட்டத்தில் தனிக் கவனம் செலுத்திய விராட் கோலி கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசி இருந்தார். இது அவரது முதலாவது டி20 சதமாக பதிவானது. அந்த போட்டியில் அவர், 61 பந்துகளை எதிர்கொண்டு, 12 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அதகளப்படுத்தி இருந்தார். இந்த போட்டியில் 122 ரன்கள் அவர் குவித்து இருந்தார். 1021 நாட்களுக்கு பிறகு இவர் அடித்த சதம் ஆகும். 


அதேபோல்,  இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் விராட் கோலி சதம் விளாசியிருந்தார். அந்த போட்டியில் விராட் கோலி  110 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 166 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் சதம் அடித்த அவர் அதன் பின்னர் அதிரடி காட்ட ஆரம்பித்தார். இந்த போட்டியில் இறுதி 10 ஓவர்களில் இந்திய அணி 116 ரன்கள் சேர்த்து இருந்தது. அதில் விராட் கோலி மட்டும் 84 ரன்கள் குவித்து இருந்தார்.  இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் சேர்த்து இருந்தது. 


டி20, ஒருநாள் தொடரில் சதம் விளாசியிருந்த விராட் கோலி டெஸ்ட் போட்டியில் மட்டும் சதம் அடிக்காமல் இருந்தார். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில், இவர் தொடர்ந்து சொதப்பி வர விராட் கோலி மீண்டும் விமர்சனத்துக்கு ஆளாகினார். ஆனால் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மிகவும் அற்புதமான சதம் விளாசியது மட்டும் இல்லாமல் 150 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியை, ஆஸ்திரேலியாவை விட அதிக ரன்கள் சேர்க்க உதவியுள்ளார்.  இது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அவரது 10வது சர்வதேச சதமாக பதிவாகியுள்ளது.