Virat Kohli IPL: ஐபிஎல் லீக் போட்டியில் விராட் கோலி - ட்ராவிஸ் இடையேயான மோதலை, ரசிகர்கள் மிகவும் மோசமாக கொண்டு சென்று இருப்பது கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.
கோலி- ஹெட்.. மைதானத்தில் மோதல்
ஐபிஎல் தொடரில் கடந்த வாரம் ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அப்போது விராட் கோலி மற்றும் ட்ராவிஸ் ஹெட் இடையே கருத்து மோதல் வெடித்தது. அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போட்டியின் முடிவில் ஹெட் கைகுலக்க வந்த போது கோலி அதனை நிராகரித்தார். இது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. ஆஸ்திரேலிய வீரர் மீது தான் தவறு என ஒரு தரப்பினரும், கைகுலுக்குவதை கோலி தவிர்த்தது தவறு என மற்றொரு தரப்பினரும் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் மைதானத்தை தாண்டி இணையத்திற்கு வந்தது மட்டுமின்றி, வீரர்களின் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெட்டின் மனைவி மீது அவதூறு..
ஆரம்பத்தில் கோலி ரசிகர்கள் ட்ராவிஸ் ஹெட்டை விமர்சித்ததோடு நிற்காமல், அத்துமீறி சென்று அவரது மனைவி ஜெசிகாவையும் இணையத்தில் கடுமையாக வசைபாடியுள்ளனர். அவதூறாகவும் பேசியுள்ளனர். முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மாவின் கேட்ச்சை பிடித்த போது, ட்ராவிஸ் ஹெட்டின் மனைவி இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த விவகாரம் ரசிக மனப்பான்மை மனிதாபினாத்தையும், ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்பையும் சிதைப்பதாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
ஜெசிகா குற்றச்சாட்டு
ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், “இப்போது நடப்பவை 2023ம் ஆண்டு உலகக் கோப்பை நிகழ்வுகளை பிரதிபலிப்பது போல் உள்ளன. விடிந்து எனது சமூக வலைதள கணக்குகளை அணுகியபோது கடுமையான விமர்சனங்கள் குவிந்து கிடப்பதை பார்த்தேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். ஆனால், அந்த கும்பல் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் குறிவைக்கின்றனர். பேரார்வம் எப்போதும் விளையாட்டின் ஒரு பகுதியாக இருக்கும், ஆனால் இந்த விளையாட்டுக்குப் பின்னால் உண்மையான மனிதர்களும் குடும்பங்களும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வதும் முக்கியம். இது ஒருவருக்கொருவர் அதிக அன்பையும் ஆதரவையும் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்” என ஜெசிகா பேசியுள்ளார்.
கோலிக்கு குட்டு
போட்டியின் போது ஆக்ரோஷத்தையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்துவது இயல்பு தான். ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போதும், அந்த வகையில் தான் கோலி மற்றும் ஹெட்டின் வார்த்தை பரிமாற்றங்கள் இருந்தன. ஆனால் போட்டியின் முடிந்த உடனேயே அந்த மோதல்களும் முடிவுக்கு வந்து விட வேண்டும். அதை தனிப்பட்ட போட்டியாக மைதானத்திற்கு வெளியே தொடரக்கூடாது. அதை உணர்ந்து ஹெட் கைகுலுக்க முயன்றபோது கோலி அதனை அங்கீகரித்து இருக்க வேண்டும். மாறாக அதை நிராகரித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் விளைவாக அவரது ரசிகர்களும் எல்லையை கடந்து, ஹெட்டின் குடும்பத்தினரை விமர்சிக்கும் வரையில் சென்றுள்ளனர் என கிரிக்கெட் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். மேலும், இத்தகைய ரசிக மனப்பான்மையால் இந்திய கிரிக்கெட்டின் மீதான மரியாதை சர்வதேச அளவில் குறைவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
