டிஎன்பிஎல் 2023 தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் மற்றும் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 3 வீரர்கள் பட்டியலை இங்கே காணலாம். 


சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 இன் 18வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் மதுரை அணிக்காக வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 56 ரன்கள் அடித்து நம்பிக்கை அளிக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் எம்.சிலம்பரசன், பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


அடுத்து களமிறங்கிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பவே, 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக்கம் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 


இந்தநிலையில் டிஎன்பிஎல் 2023 தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 


சாய் சுதர்சன்:


லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் டிஎன்பிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 82.50 என்ற சராசரியுடன் 4 அரைசதங்கள் உள்பட 330 ரன்கள் எடுத்துள்ளார். 


பாபா அபராஜித் : 


சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர் பாபா அபராஜித் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நேற்றைய மதுரை அணிக்கு எதிரான போட்டிகளிலும் கூட 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 273 ரன்களை குவித்துள்ளார். 


அஜிதேஷ் குருசுவாமி: 


நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் அஜிதேஷ் குருசுவாமி 5 போட்டிகளில் விளையாடி 188 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவரது பேட்டிங் சராசரியும் 62.67 ஆக உள்ளது. அஜிதேஷ் குருசுவாமிக்கு 20 வயதே என்பது குறிப்பிடத்தக்கது. 


TNPL 2023 அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியல்: 


புவனேஸ்வரன்: 


ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின்  வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வரன் டிஎன்பிஎல்லில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்களை வீழ்த்தில் டாப்பில் உள்ளார். 


ஷாருக்கான்: 


ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக பேட்ஸ்மேனாகவே பார்த்த ஷாருக்கான், டிஎன்பிஎல்லில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா..? இவர் 5 போட்டிகளில் ஆறு என்ற எகானமி விகிதத்தில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


சரவண குமார்: 


திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சரவண குமார் வலது கை வேகப்பந்து வீச்சாளர் போட்டியில் 12.55 சராசரியில் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.