சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


ஐபிஎல் தொடரை தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதளவும் வரவேற்கப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7வது சீசன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 18 போட்டிகள் நடந்த நிலையில் நேற்று நடந்த 19வது போட்டியில் கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. சேலம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி கேப்டன் அபிஷேக் தன்வார், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் கண்ட கோவை கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் சுரேஷ் குமார் 4 ரன்களில் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும் எடுத்தனர். பின்னர் அதீர் உர் ரஹ்மான் 31, ராம் அரவிந்த் 50 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் கோவை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. 


தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் கண்ட சேலம் அணியில் எந்த வீரரும் பெரிய அளவிலாக ரன்களை அடிக்கவில்லை. அதிகப்பட்சமாக சன்னி சந்து 29, முகமது கான் 20, ஆகாஷ் சும்ரா 20 ரன்கள் எடுக்க 19 ஓவர்களில் சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  கோவை அணி தரப்பில் அதிகப்பட்சமாக கவுதம் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.இதன்மூலம் கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


இந்த வெற்றியின் மூலம் கோவை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது.இரண்டாவது இடத்தில் நெல்லை, 3வது இடத்தில் திண்டுக்கல், 4வது இடத்தில் சேப்பாக் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 'மாமன்னன் படத்தை வெளியிட்டால் தியேட்டர் அடித்து நொறுக்கப்படும்’.. மிரட்டல் வீடியோவால் பரபரப்பு...