Sachin Tendulkar: நான் இந்திய அணியில் இணைந்த போது சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சியாக இல்லை என இந்தியா உலகக்கோப்பையை வெல்ல காரணமானவர் கூறியுள்ள தகவல் உலகம் முழுவதும் வேகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் இந்தியாவின் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்து, தனது பதவிக்காலத்தில் பல்வேறு மைல்கற்களை இந்தியா எட்ட வழிவகை செய்தார். அவரது பயிற்சியின் கீழ், இந்தியா ODIகள் மற்றும் டெஸ்ட் இரண்டிலும் நம்பர்.1 அணியாக மாறியது, மேலும் 2011 இல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தது. கேரி கிர்ஸ்டன் இந்தியாவின் கிரிக்கெட் வட்டாரங்களில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதுமே மிகவும் மரியாதைக்குரிய நபராக பார்க்கப்பட்டார். இவரது காலத்தில் இந்திய அணியின் வளர்ச்சி முற்றிலும் ஏறுமுகமாக இருந்தது. இப்படியான கேரி கிரிஸ்டன் சமீபத்திய பேட்டியில், இந்தியாவின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிந்துள்ளார்.
ஆடமின் யூடியூப் சேனலில் 'தி ஃபைனல் வேர்ட் கிரிக்கெட் போட்காஸ்ட்' நிகழ்ச்சியில் ஆடம் காலின்ஸிடம் பேசிய தென்னாப்பிரிக்க கிரிகெட் வீரரான கேரி கிரிஸ்டன், தான் இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்தார். அதில், அவர் டிசம்பர் 2007 இல் அணியில் இடம்பிடித்தபோது, சச்சின் டெண்டுல்கர் போன்ற நட்சத்திர வீரர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியற்ற தன்மையை உணர்ந்ததாக கூறியுள்ளார். அதேபோல் மகேந்திர சிங் தோனி தனது அமைதியான நடத்தை காரணமாக இந்திய அணியின் மற்ற வீரர்களில் இருந்து எப்படி தனித்து நிற்கிறார் என்பதையும் அவர் பேசியுள்ளார்.
"நான் அணியில் சேர்ந்த நேரத்தில் சச்சின் மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருந்தார். சச்சின் மற்ற வீரர்களை விட தனித்து இருந்தார். மேலும் அவர் தனது கிரிக்கெட்டை ரசிக்கவில்லை, அதேபோல் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அவருடன் இணைவதும், அணிக்கு அவர் பெரிய பங்களிப்பை அளித்துள்ளார் என்பதை உணர வைப்பதும் எனக்கு முக்கியமானதாக இருந்தது. மேலும் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக செய்ய வேண்டியதை விட ஒரு சீனியர் வீரராக அணிக்கு அவர் வழங்கவேண்டிய பங்களிப்பு அதிகமாக இருந்தது”, என்று கிர்ஸ்டன் கூறினார்.
தோனியின் தனித்துவம்
“இந்தியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்திற்கு மத்தியில், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வேலை அணிக்காக செயல்படுவதே தவிர தனிப்பட்ட மைல்கற்களுக்கு செல்வது அல்ல என்பதை மறந்து விடுகிறார்கள். சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களிடமிருந்து தோனி தனித்து நின்ற பகுதி இதுதான்,” எனவும் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.
கிர்ஸ்டன் இந்திய அணி மற்றும் கேப்டன் தோனியுடன் தனது பிணைப்பு பற்றி இந்த பேட்டியில் கூறினார். “எந்தவொரு பயிற்சியாளரும் சட்டையின் முன்பகுதியில் உள்ள பெயருக்காக விளையாடும் வீரர்கள் குழுவை விரும்புவார்கள், சட்டையின் பின்பகுதியில் உள்ள பெயர் அல்ல. தோனி ஒரு சிறந்த கேப்டன். எம்.எஸ் மற்றும் நான் சர்வதேச விளையாட்டில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத கேப்டன்-பயிற்சியாளரின் மிகவும் சாத்தியமில்லாத கூட்டணியை உருவாக்கினோம், மேலும் யாராலும் நம்பமுடியாத பயணத்தை நாங்கள் ஒன்றாகச் செய்தோம்.
“ இந்த வகையான பரபரப்புகளுக்கு மத்தியில், ஒரு வீரராக தனது தனிப்பட்ட தேவைகள் என்ன என்பதில் நீங்கள் அடிக்கடி தொலைந்து போவீர்கள். ஆனால், தோனி ஒரு கேப்டனாக தனித்து விளங்கினார், ஏனெனில் அவர் அணி சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்தினார். அவர் கோப்பைகளை வென்று பெரிய வெற்றியைப் பெற விரும்பினார். அவர் அதைப் பற்றி மிகவும் பகிரங்கமாகவும் வீரர்களிடம் கூறினார். இது அணியில் பல வீரர்களை எங்களின் எண்ண ஓட்டத்துக்கு இழுக்க உதவியது, இதன் விளைவாக, சச்சின் டெண்டுல்கரும் தனது கிரிக்கெட்டை ரசிக்கத் தொடங்கினார் ,” என்று கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.