ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முடிவடைந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் வென்றது. அன்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரவிசந்திரன் அஸ்வின் 6 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டும் எடுத்திருந்தார். 


அதேபோல், நடந்து முடிந்த பார்டர்- கவாஸ்கர் டிராபியில் அஸ்வின் ஒட்டுமொத்தமாக 25 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார்.  இந்த விக்கெட் வேட்டையின்மூலம் அஸ்வின், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 


அஸ்வின் முதலிடம் பிடித்ததற்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது பதிவில், “தமிழகத்தின் பெருமை ரவிசந்திரன் அஸ்வின். பந்து வீச்சாளர்களில் டெஸ்ட் தர வரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்ததன் மூலம் எங்களை பெருமைப்படுத்துகிறார். தகுதியான மரியாதை & இது இந்திய கிரிக்கெட்டுக்கு உங்கள் பங்களிப்பை பறைசாற்றுகிறது. இன்னும் பல புகழ் உங்களை நோக்கி வர இருக்கிறது.” என பதிவிட்டு இருந்தார். 


ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியல்:


நடந்து முடிந்த அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நம்பர் 1 இடத்தை, ரவிசந்திரன் அஸ்வினும், இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆண்டர்சனும் ஒரே புள்ளியின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டனர். இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு அஸ்வின் கூடுதலாக 10 புள்ளிகள் பெற்று, 869 புள்ளிகளுடம் முதலிடத்தில் இருக்கிறார். 859 புள்ளிகளுடன் ஜேம்ஸ் ஆண்டசனும், 841 புள்ளிகளுடன் பாட் கம்மின்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 


4வது இடம் - ககிசோ ரபாடா (825)
5வது இடம் - சாஹீன் அப்ரிடி (787)
6வது இடம் - ஓலீ ராபின்சன் (785)
7வது இடம் - ஜஸ்பிரித் பும்ரா (780)
8வது இடம் - நாதன் லயன் (757)
9வது இடம் - ஜடேஜா (753)
10வது இடம்- கைல் ஜேமிசன் (749)