இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. அதிரடி வீரராக, பேட்ஸ்மேனாக உலா வந்த தோனியை ஒரு மாபெரும் கேப்டனாக மாற்றியது 2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடர்.


தோனி - ஜோகிந்தர் சந்திப்பு:


அந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஓவரை வீசியவர் ஜோகிந்தர்சிங் சர்மா. இவர் தற்போது டி.எஸ்.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றதாக கூறப்படுகிறது. டி.எஸ்.பி. சீருடையில் உள்ள ஜோகிந்தர் சர்மாவும், தோனியும் சந்தித்துக் கொண்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


முதன்முறையாக டி20 உலகக்கோப்பைத் தொடரிலே கேப்டனாக பொறுப்பேற்ற தோனிக்கு அந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று கொடுத்தவர் ஜோகிந்தர்சிங் ஷர்மா ஆவார். தோனி தலைமையில் முழுக்க முழுக்க இளம் பட்டாளத்துடன் சென்ற தோனி படை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கோப்பையை கைப்பற்றி புது வரலாறு படைத்தனர்.


பரபரப்பான கடைசி ஓவர்:


இறுதிப்போட்டியில் 158 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அனுபவ வீரர் ஹர்பஜன்சிங்கிற்கு ஒரு ஓவர் கைவசம் இருந்த நிலையில், தோனி ஜோகிந்தர் சர்மாவிடம் கடைசி ஓவரை வழங்கினார். அந்த ஓவரின் முதல் பந்தை ஒயிடாக வீச ஜோகிந்தர் சர்மா பதற்றம் அடைந்தார். அவரிடம் தோனி அருகில் சென்று அறிவுரை வழங்குவார். பின்னர், முதல் பந்தை ஜோகிந்தர் சர்மா டாட் பந்தாக வீசுவார். அடுத்த பந்தை பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் சிக்ஸராக விளாசினார். இதனால்,  4 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அதேசமயம் பாகிஸ்தான் அணியின் அந்த கடைசி விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும்.


அப்போது, அவர் வீசிய 3வது பந்தை மிஸ்பா உல் ஹக் பின்பக்கம் சிக்ஸர் விளாச முயற்சிப்பார். ஆனால், அந்த பந்தை ஸ்ரீசாந்த் லாவகமாக கேட்ச் பிடித்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார். 2007 50 ஓவர் உலகக்கோப்பையில் மோசமாக தோற்று வெளியேறிய இந்திய அணிக்கு அந்த வெற்றி புதிய திருப்பமாக அமைந்தது.


ஹரியானாவில் டி.எஸ்.பி.:


அந்த தொடரில் ஆடிய தோனி, யுவராஜ், ஹர்பஜன், கம்பீர், பதான், உத்தப்பா, ரோகித்சர்மா என அனைவரும் ஜாம்பவனாக ஜொலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகிந்தர் சர்மா அந்த போட்டியில் 3.3 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  அந்த வெற்றி காரணமாக அவருக்கு மத்திய அரசு டி.எஸ்.பி. பதவி வழங்கியது. இவர் தற்போது ஹரியானா மாநிலத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.