டி20 உலகக் கோப்பை 2024:


அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள். ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஜூன் 6) நடைபெற்ற 11 வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியை எதிர் கொண்டு விளையாடியது.


இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுக்க ஆட்டம் சமநிலையானதால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது.


அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்கள் எடுத்தது. பின்னர் 19 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.  


பாகிஸ்தானுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா:


இந்நிலையில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி அடைந்த அமெரிக்க அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் தான் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


அதற்கான முக்கிய காரணம் குரூப் ஏ சுற்றி இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிதான் முதலில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டது. அதன்படி, குரூப் ஏவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளான அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகள் லீக் ஆட்டங்களுடன் வெளியேறி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் ரசிகர்களின் கணிப்புகளை பொய்யாக்கும் படி அதிரடியான ஆட்டத்தை விளையாடி வருகிறது அமெரிக்க அணி. ஒருவேளை அமெரிக்கா அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்தாலும், அயர்லாந்து அணியை வீழ்த்தினாலே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும்.


அதேபோல் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்தால், சூப்பர் 8 சுற்று கனவு மொத்தமாக முடிவுக்கு வரும். ஏற்கனவே 2007 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோத உள்ளதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் நிலவிவருகிறது.