PAK vs NED: த்ரில் மேட்ச்! தோல்வி பயத்தை காட்டிய நெதர்லாந்து.. போராடி வெற்றி பெற்ற பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியிடம் போராடி வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை இன்று தொடங்கியது. இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிரடியாக தொடங்கிய பாகிஸ்தான்:
இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு பர்ஹான் - சையும் ஆயூப் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். பர்ஹான் பொறுப்புடன் ஆட, ஆயூப் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய ஆயூப் 13 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் களமிறங்கியது முதலே பவுண்டரிகளாக விளாசிய கேப்டன் சல்மான் அகா அவுட்டானார்.
சல்மான் அகா 12 ரன்களில் அவுட்டாக மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய பர்ஹான் 31 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதன்பின்னர், நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.
பயத்தை காட்டிய நெதர்லாந்து:
உஸ்மான் கான் டக் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் 15 ரன்களில் அவுட்டாகினார். முகமது நவாசும் 6 ரன்களில் அவுட்டாக, ஆட்டம் நெதர்லாந்து பக்கம் திரும்பியது. அப்போது, பஹீம் அஷ்ரப் - ஷாகின் அப்ரிடி ஜோடி சேர்ந்தனர். 18வது ஓவர் வரை ஆட்டம் நெதர்லாந்திற்கு சாதகமாக இருந்தது.
வான்பீக் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை அஷ்ரப் சிக்ஸருக்கு அனுப்ப, அடுத்த பந்தை அவர் கேட்சிற்கு கொடுத்தார். அந்த கடினமான கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் தவறவிட, அதே ஓவரில் அவர் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச கடைசி 6 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
பாகிஸ்தான் த்ரில் வெற்றி:
கடைசி ஓவரிலும் அஷ்ரப் பவுண்டரி விளாசி ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு சாதகமாக முடிக்க, பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஹீம் அஷ்ரப் 11 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தால், இந்திய அணியுடான ஆட்டத்தை புறக்கணிப்பதாக கூறியிருந்த பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறும் சூழல் உண்டாகியிருக்கும்.
பலமிகுந்த பாகிஸ்தான் அணிக்கு சவால் அளிக்கும் விதமாக ஆடிய நெதர்லாந்து அணியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முன்னதாக, நெதர்லாந்து அணிக்காக ஆடிய மைகேல் லெவிட் 24 ரன்களும், லீட் 30 ரன்களும், கேப்டன் எட்வர்ட்ஸஅ 37 ரன்களும் எடுத்தனர்.




















