டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் முதல் சூப்பர் 12 போட்டியில் ஸ்காட்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கப்டில் மற்றும் மிட்செல் முதல் ஓவரில் 13 ரன்கள் விளாசினர்.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதல் ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பாக இங்கிலாந்து-இலங்கை போட்டியின் முதல் ஓவரில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் அடித்திருந்தது. தற்போது அதை நியூசிலாந்து அணி 13 ரன்கள் அடித்து தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸிகள் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் மிகச்சிறந்த இரண்டு ஜெர்ஸி என்று இந்த இரண்டு அணிகளின் ஜெர்ஸியை பலரும் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸியை ஒரு 12 வயது சிறுமி வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியானது. இதுதொடர்பாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தது. அதில், எங்களுடைய டி20 உலகக் கோப்பை ஜெர்ஸியை வடிவமைத்த 12 வயது சிறுமி ரெபேக்கா டவுனி எங்களுடைய போட்டியை முதல் முறையாக கண்டு ரசித்து வருகிறார் என்று பதிவிட்டிருந்தது. ரெபேக்கா டவுனி ஹாடிங்டன் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் அந்தப் பதிவில் இவ்வளவு சிறப்பாக ஜெர்ஸியை வடிவமைத்தற்கு நன்றி என்றும் பதிவிட்டிருந்தது.
இந்தப் பதிவை மேற்கோள் காட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒரு பதிவை செய்திருந்தது. அதில், "ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸி மிகவும் அசத்தலாக உள்ளது. ரெபேக்கா சிறப்பாக வடிவமைத்துள்ளார்" எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸி வைரலானது. தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது.
மேலும் படிக்க: டி20 பவர்பிளேவில் தொடர்ந்து சொதப்பும் இந்திய பந்து வீச்சாளர்கள்- தரவுகள் கூறுவது என்ன?