உலககோப்பை டி20 போட்டித்தொடர் கடந்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில், துபாயில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 2007ம் ஆண்டு முதல் உலககோப்பை தொடரில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி, டி20 உலககோப்பை போட்டியை வெல்வது இதுவே முதன்முறை ஆகும்.


வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தில் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடித் தீர்த்தனர். மைதானத்தில் வெளிப்படுத்திய தங்களது மகிழ்ச்சியை ஆஸ்திரேலிய வீரர்கள் ட்ரெசிங் ரூமிலும் தொடர்ந்தனர்.






ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தான் காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அதில் தனது கையில் இருந்த குளிர்பானத்தை ஊற்றுகிறார். பின்னர், ஷூவில் ஊற்றிய குளிர்பானத்தை அப்படியே குடித்துவிட்டு ஆர்ப்பரிக்கிறார். அப்போது, அவரிடம் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் மேத்யூ வேடிடம் இருந்த ஷூவை சட்டென்று வாங்கினார்.





பின்னர், தனது கையில் வைத்திருந்த குளிர்பானத்தை ஷூ முழுவதும் ஊற்றி நனைத்தார். பின்னர், ஷூவில் இருந்து வடிந்த குளிர்பானத்தை குடித்துவிட்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார். இந்த கொண்டாட்டத்தின்போது ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், ஹேசல்வுட் என்று அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர். ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த விசித்திரமான கொண்டாட்டத்தை ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், உங்களது திங்கட்கிழமை எப்படி போகிறது? என்று கேலியாகவும் பதிவிட்டுள்ளது.  இந்த டுவிட்டர் பதிவிற்கு கீழ் பலரும் விசித்திரமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  





முன்னதாக, நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 85 ரன்களை அதிகபட்சமாக குவித்தார். தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவிற்கு கேப்டன் பிஞ்ச் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆனால், மறுமுனையில் டேவிட் வார்னர் 38 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 53 ரன்களை எட்டி ஆட்டமிழந்தார். மறுமுனையில் மிட்ஷெல் மார்ஷ் 50 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 77 ரன்களை குவித்தார். மேக்ஸ்வெலும் 18 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்களை சட்டென்று குவித்தார். இதனால், ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 173 ரன்களை குவித்து முதன்முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


மேலும் படிக்க : ‛என்னை யாரும் தேடாதீங்க...’ சியர்ஸ்... சொல்லி புறப்பட்ட மேக்ஸ்வெல்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண