Haider Ali: பழ வியாபாரி டூ உலகக்கோப்பை நாயகன்! கைவிட்ட பாகிஸ்தான்.. காப்பாற்றிய ஐக்கிய அரபு அமீரகம்
Haider Ali: 2026 டி20 உலகக்கோப்பையில், தனது பிறந்த மண்ணான பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதர் அலி களமிறங்குவதே தனது ஆசை என்றார்.

பாகிஸ்தானின் புழுதி நிறைந்த தெருக்களில் பிறந்து இன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் ஹைதர் அலியின் கதை பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறது, தனது லட்சியம் மற்றும் கனவை விவரித்தார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
கிராமத்துச் சிறுவனும் நள்ளிரவுப் பணியாளரும்
ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில்., பாகிஸ்தானின் வசதிகள் அற்ற 'கமாலியா அஸ்மத் ஷா' என்ற சிறிய கிராமத்தில் வளர்ந்தவர் ஹைதர் அலி. அவரை வளர்த்த அவரது மாமா ஒரு நிபந்தனை விதித்திருந்தார்: "பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை கிரிக்கெட் விளையாடக் கூடாது." தனது கனவைச் சுமந்துகொண்டு தேர்வில் வென்ற ஹைதர், ஒரே ஒரு பேருந்து டிக்கெட்டை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு லாகூர் சென்றார்.
அங்கு வாழ்வதற்கு வழியின்றி பகலில் பயிற்சியும், இரவில் ஹோட்டலில் 'வெயிட்டர்' வேலையும் செய்தார். நள்ளிரவு வரை வேலை செய்தால்தான் ஜிம் மற்றும் உணவிற்கான கட்டணத்தைச் செலுத்த முடியும் என்ற இக்கட்டான நிலையிலும், லாகூரில் தனது மகன் கிரிக்கெட் விளையாடுகிறான் என்று நம்பியிருந்த குடும்பத்திற்காக அவர் ஓயாமல் உழைத்தார்.
மரணத்தின் விளிம்பிலிருந்து பிழைத்தார்:
கொரோனா பேரிடர் காலத்தில் வேலை இழந்த ஹைதர், அடுத்த நான்கு ஆண்டுகள் தெருத்தெருவாகப் பழ வண்டி தள்ளி பழங்களை விற்றார். ஆனால், விதி அவரை மேலும் சோதித்தது. பழங்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி பாலத்திலிருந்து கவிழ்ந்தது.
30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ஹைதருக்கு தோள்பட்டை, கால் மற்றும் மூக்கு எலும்புகள் என உடல் சிதைந்தது. "இனி இவரால் நடக்கவே முடியாது, கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது" என்று மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால் ஹைதர் அலி கைவிடவில்லை. "கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பைத் தந்துள்ளார், என் உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்" என்று மனதிற்குள் உறுதிகொண்டார்.
சபதம் எடுத்த ஹைதர்
வெறும் 10 பாகிஸ்தான் ரூபாயுடன் (சுமார் 1 திராம்) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) பயணமானார் ஹைதர். "சாதித்த பிறகுதான் திரும்புவேன்" என்று தனது தாயிடம் சபதம் செய்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3:30 மணிக்கு பயிற்சியைத் தொடங்கி, இரவு வரை உழைத்தார்.
அவரது உழைப்பிற்கு 2025-ல் பலன் கிடைத்தது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை (7 ரன்கள் மட்டும் கொடுத்து) வீழ்த்தி, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக UAE முதல் முறையாகத் தொடரை வெல்லக் காரணமாக அமைந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும்
2026 டி20 உலகக்கோப்பையில், தனது பிறந்த மண்ணான பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதர் அலி களமிறங்குவதே தனது ஆசை என்றார். லாகூர் தெருக்களில் ஒரு சாதாரண 'பழ வியாபாரி' ஆக இருந்த அவர் இன்று உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக களமிறங்குவது பலருக்கும் தன்னம்பிக்கையை அளிக்கும்





















