T20 WC 2026: நாளைக்கு Super 8 போட்டிகள் ஸ்டார்ட்.. இந்தியாவுக்கு எப்போ? யாருகூட மேட்ச்?
டி20 உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் இன்றுடன் முடிந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுகள் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து மோதுகின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றில் சிறிய அணிகள் என்று கருதப்பட்ட அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிறப்பாக ஆடியது.
நாளை முதல் சூப்பர் 8 சுற்று:
அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் சூப்பர் 8 சுற்று நாளை முதல் தொடங்குகிறது. மொத்தம் 4 பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் இந்த சுற்றில் பங்கேற்கும்.
நாளை நடக்கும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் இந்தியாவுடன் மட்டுமே தோல்வியைத் தழுவினர். மற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். நியூசிலாந்து அணியும் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியைத் தழுவியது. மற்ற போட்டிகளில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து:
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில் சுழற்பந்துவீச்சு அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இரு அணிகளைப் பொறுத்தமட்டில் பந்துவீச்சு சரிசம பலமாக இருக்கிறது. ஆனால், பேட்டிங்கில் பாகிஸ்தானைக் காட்டிலும் நியூசிலாந்தே வலுவாக இருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் திணறியதே அவர்களின் பேட்டிங் பலவீனத்தைக் காட்டியது.
இதனால், நாளைய போட்டியில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரையிறுதிக்கு முன்னேற சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்:
குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான்
குரூப் பி - ஜிம்பாப்வே, இலங்கை
குரூப் சி - வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து
குரூப் டி - தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து
கற்றுக்கொடுத்த கத்துக்குட்டிகள்:
முன்னாள் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் லீக் சுற்றிலே வெளியேறியது. பந்துவீச்சில் பலவீனமாக இருந்ததும் அவர்களின் தோல்விக்கு காரணம் ஆகும். ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, நேபாளம், நெதர்லாந்து போன்ற அணிகள் வெற்றி பெறாவிட்டாலும் முறையே தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தோல்வி பயத்தை காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு யார்? யாருடன்?
இந்திய அணி தனது சூப்பர் 8 சுற்றில் நாளை மறுநாள் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. பின்னர், 26ம் தேதி இந்தியா ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. சூப்பர் 8 சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த சுற்றில் ஒரு அணி 3 போட்டிகளில் விளையாட வேண்டும். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் ஆகும். 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் ரன்ரேட் சாதகமாக இருந்தால் அரையிறுதிக்குச் செல்லலாம். மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டியும், வரும் மார்ச் 8ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.




















