Abhishek Sharma: மீண்டும் முட்டை..! டக் அவுட்டில் ஹாட்ரிக்.. ரசிகர்களை அப்செட்டாக்கிய அபிஷேக் சர்மா!
Abhishek Sharma: அபிஷேக் சர்மா இந்த டி20 உலகக்கோப்பையில் தான் ஆடிய 3வது போட்டியிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், குரூப் ஏ சுற்றில் இந்திய அணி இன்று தனது கடைசி லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது.
மீண்டும் டக் அவுட்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, ஆட்டத்தை அபிஷேக் சர்மா - இஷான்கிஷன் தொடங்கினார். இந்த தொடரில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலுமே டக் அவுட்டாகிய அபிஷேக் சர்மா இந்த போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆர்யன் தத் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4வது பந்திலே போல்டானார்.
ஹாட்ரிக் டக்:
இதன்மூலம், இந்த டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா தான் ஆடிய 3 போட்டிகளிலுமே டக் அவுட்டாகியுள்ளார். இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா ஹாட்ரிக் டக் அவுட்டாகியிருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அபிஷேக் சர்மா கடைசியாக ஆடிய 9 ஆட்டங்களில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதே நிலையில் இவர் நீடித்தால் அணியில் தொடர்ந்து நீடிப்பது சவாலாக மாறிவிடும்.
கம்பேக் தர வேண்டிய கட்டாயம்:
25 வயதான அபிஷேக் சர்மா சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிரடியாக ஆடியதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தவர். இந்திய அணிக்காக 41 டி20 போட்டிகளில் ஆடி 1297 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 135 ரன்கள் எடுத்துள்ளார். 2 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 123 பவுண்டரிகள், 88 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
சுப்மன்கில், சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் என தொடக்க வீரர்களுக்கான போட்டி பட்டியல் மிகப்பெரியது ஆகும். இந்த நிலையில், தனது தொடக்க வீரர் நிலையைத் தக்க வைக்க வேண்டும் என்றால் அபிஷேக் சர்மா தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால் அவர் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அதிக டக் அவுட்:
ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற பட்டியலில் அபிஷேக் சர்மா 2வது இடத்தில் உள்ளார். அவர் இந்தாண்டு மட்டும் 5 முறை ஆட்டமிழந்துள்ளார். முதலிடத்தில் சையும் அயூப் 6 முறை அவுட்டாகி முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் சலோம்வாங், குஷல் புர்டல், தர்மகேசுமா, பர்வேஸ் ஹொசைன் ஆகியோருடன் அபிஷேக் சர்மாவும் உள்ளார்.




















