அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் இன்றைய போட்டியில் நாங்கள் அச்சமின்றி விளையாடுவோம் என்று கூறியுள்ளார்.


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளது. இதில் இன்று (ஜூன் 19) நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் குரூப் 2வில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா விளையாட  உள்ளது. அதன்படி, இந்த போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட்டில் நடைபெற உள்ளது. 


முதன் முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான தகுதியை பெற்ற அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதும் இதுவே முதல் முறை. இதன் மூலம் அந்த அணி ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்தது என்றே சொல்ல வேண்டும். 


அச்சமின்றி விளையாடுவோம்:


இந்நிலையில் அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் இன்றைய போட்டியில் நாங்கள் அச்சமின்றி விளையாடுவோம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”எங்கள் அணியினர் மகிழ்ச்சியாக உள்ளனர். உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகக் கோப்பையை பற்றித்தான் பேசி வருகிறோம்.


இதோ இப்போது நாங்கள் எங்கள் கிரிக்கெட்டை ரசிக்கப் போகிறோம். எங்களால் எந்த அணியையும் தோற்க்கடிக்க முடியும் என்று தான் நான் நினைக்கிறேன். உலகக் கோப்பைக்கு முன்னரே நாங்கள் சில தொடர்களில் நன்றாக விளையாடினோம். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் வங்கதேச அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். உலகக் கோப்பைக்கு முன்பே எங்களால் பெரிய அணிகளோ அல்லது சிறிய அணிகளோ வெல்ல முடியும் என்று நம்பினோம். அதை நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்து காட்டினோம். இப்போது சூப்பர் 8 சுற்றிலும் அதே மனநிலையில் தான் விளையாடுகிறோம்” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் அச்சமின்றி கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம், நீங்கள் மேலே வந்தால் அது நல்லது, நீங்கள் மேலே வரவில்லை என்றால் நாங்கள் கற்றுக்கொள்கிறோம். நான் சூழ்நிலையில் விளையாட விரும்புகிறேன்.


எந்த கவலையும் இல்லை:


நான் எப்போதும் என் அணிக்காக விளையாட விரும்புகிறேன். நான் ஒரு ஆட்டத்தில் விளையாடி, ஒரு ஓவருக்கு ஐந்து ரன்கள் தேவை என்றால், அதற்கு ஏற்றவாறு நான் பேட்டிங் செய்வேன். எங்களுக்கு 15 ரன்கள் அல்லது அதற்கு மேல் தேவை என்றால், நான் அதற்கு ஏற்றவாறு பேட்டிங் செய்வேன். ஸ்டிரைக் ரேட் மற்றும் மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் நான் உண்மையில் கவலைப்படவில்லை.


அமெரிக்காவில் தற்போது கிரிக்கெட் வளர்ந்து வருகிறது என்பதை நான் நம்புகிறேன். எனவே நாங்கள் எங்கள் மக்களுக்கு நன்றி சொல்கிறோம். தொடர்ந்து எங்களை ஆதரியுங்கள்” என்று கூறியுள்ளார் அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ்.