T20 WC NZ Vs AFG: டி20 உலகக்கோப்பை; டிம் சீஃபெர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியால் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில், டிம் சீஃபெர்ட் மற்றும் கிளென் ஃபிலிப்ஸின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற் 4-வது லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.
முதலில் ஆடி 182 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் ஜெட்ரன் நிதானமாக ஆடினர். இருப்பினும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெட்ரன் ஆட்டமிழந்ததையடுத்து, நெய்ப் களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடிய நிலையில், மறுமுனையில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குர்பாஸ் ஆட்டமிழந்து, அடல் களமிறங்கினார்.
இந்த ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்த நிலையில், 29 ரன்கள் எடுத்து அடல் ஆட்டமிழந்து அப்துல் ரசூலி களத்திற்கு வந்தார். அவர் சற்று அதிரடி காட்ட ஆரம்பித்த நிலையில், மறுமுனையில் அரை சதத்தை பூர்த்தி செய்து அடித்து ஆடிவந்த நெய்ப் 35 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து, ரசூலியுடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார், அவர் தன் பங்கிற்கு 2 சிக்சர்களை அடித்து 14 ரன்களில், ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். முகம்மது நபி 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில், அதிகபட்சமாக ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
17.5 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து
இதைத் தொடர்ந்து, 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் சீஃபெர்ட் மற்றும் ஆலன் களமிறங்கினர். சீஃபெர்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், ஆலன் 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமிளித்தார். அவர் தொடர்ந்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால், நியூசிலாந்து அணி 2-வது ஓவரிலேயே 14 ரன்களுக்கு 2 விகெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ரச்சினைத் தொடர்ந்து சீஃபெர்ட்டுடன் ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்பும் அதிரடியாக ஆடினார். இந்த ஜோடி நியூசிலாந்து அணிக்கு மளமளவென ரன்களை சேர்த்தது. சீஃபெர்ட் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில், 25 பந்துகளில் 42 ரன்களை குவித்திருந்த பிலிப்ஸ் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து சாப்மேன் களமிறங்கி சற்று அதிரடி காட்டிய நிலையில், மறுமுனையில் 3 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருந்த சீஃபெர்ட் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மிட்செலும் அடித்து ஆடினார். இந்நிலையில், 28 ரன்கள் எடுத்திருந்த சாப்மேன் ஆட்டமிழந்து, கேப்டன் சேன்ட்னர் களமிறங்கி அதிரடி காட்டி, அணியை வெற்றி பெற்ச் செய்தார்.
இறுதியில், 17.5 ஓவர்களிலேயே, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. மிட்சல் 25 ரன்களுடனும், சேன்ட்னர் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




















