IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
T20 WC 2026: டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா அமெரிக்காவுடன் தனது முதல் ஆட்டத்தில் இந்தியா ஆடியது. அமெரிக்காவின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி திணறிய நிலையில், சூர்யகுமார் யாதவின் 83 ரன்கள் உதவியால் இந்தியா அமெரிக்காவிற்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
162 ரன்கள் டார்கெட்:
162 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்காவிற்கு இந்திய பந்துவீச்சு சவால் அளிக்கும் விதமாக இருந்தது. ஆட்டத்தை தொடங்கிய அமெரிக்க அணிக்கு ஆண்ட்ரிஸ் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கிய நிலையில் அவர் சிராஜ் பந்தில் அவுட்டானார். அவர் அவுட்டான பிறகு களமிறங்கிய மோனங்க் படேல் அர்ஷ்தீப்சிங் பந்தில் அவுட்டானார்.
கலக்கல் பவுலிங்:
மற்றொரு தொடக்க வீரர் சாய்தேஜாவும் 2 ரன்னில் அவுட்டாக, அடுத்து ஜோடி சேர்ந்த மிலிந்த் குமார் - சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி நிதானமாக ஆடினார். ஆனாலும், இந்திய அணி பந்துவீச்சை சவாலாக வீசியதால் அவர்களால் எதிர்பார்த்த ரன்களை வேகமாக குவிக்க முடியவில்லை.
இந்த நிலையில், நிதானமாக ஆடிய மிலிந்த் குமார் 34 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டாக, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். தோல்வியின் பிடியில் சிக்கிய அமெரிக்காவிற்காக சுபம் ரஞ்சனே போராடினார். மறுமுனையில் ஹர்மித்சிங் டக் அவுட்டானார்.
மாஸ் காட்டிய சிராஜ்:
கடைசியில் 20 ஓவர்களில் அமெரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமெரிக்காவிற்கு சுபம் ரஞ்சனே 22 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார். முகமது சிராஜ் 4 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப்சிங், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக போராடியதன் காரணமாகவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி உற்சாகம் அடைந்துள்ளது. மேலும், அடுத்து வரும் போட்டிகளில் தனது பேட்டிங் திறனை மேலும் வலுவாக்க முயற்சிக்கும் என்று கருதப்படுகிறது.




















