இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் முக்கிய தொடரான சையத் முஷ்தாக் அலி டி20 தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. இந்திய முன்னாள் வீரரான சையத் முஷ்தாக் அலியின் பெயரில் நடைபெறும் இந்த டி20 தொடரில் 38 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. தமிழக அணியை விஜய் சங்கர் தலைமையேற்று வழிநடத்துகிறார். Elite A பிரிவில் தமிழக அணி இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் பஞ்சாப், ஒடிசா, கோவா, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.


2006-07 இல் நடைபெற்ற முதல் சீசனிலும் தமிழக அணியே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த சீசனிலும் தமிழக அணியே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.




சையத் முஷ்தாக் அலி தொடரின் இந்த சீசன் வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஏனெனில், ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் விரைவிலேயே நடைபெற இருக்கிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளோடு புதிதாக இரண்டு அணிகளும் சேர்ந்து ஏலத்தில் இறங்க போகின்றன. அந்த அணிகள் தங்களுக்கு தேவையான இளம் திறமைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள இந்த தொடரை பயன்படுத்திக் கொள்வார்கள். பெரும்பாலான ஐ.பி.எல் அணிகளின் வீரர்கள் தேர்வுக்குழுவை சேர்ந்தவர்களும் பயிற்சியாளர் குழுவை சேர்ந்தவர்களும் இந்த போட்டிகளை நேரிலேயே கண்டுகளிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த தொடர் முடிந்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே ஐ.பி.எல் இன் மெகா ஏலம் நடக்கும் என்பதால் இங்கே பெர்ஃபார்ம் செய்யும் வீரர்கள் நல்ல தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட வாய்ப்பிருக்கும். மேலும், இந்த முறை 2 அணிகள் புதிதாக வந்திருப்பதால் வழக்கத்தை விட கூடுதலான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இளம் வீரர்களுக்கு உலகமே உற்றுநோக்கும் ஒரு மேடை இதன் மூலம் சாத்தியமாகும்.




ஐ.பி.எல் ஐ தாண்டி இந்திய அணியும் இந்த தொடரை இந்த முறை கொஞ்சம் கூடுதலாகவே உற்றுநோக்கும். அதற்கு இந்திய அணியின் சமீபத்திய உலகக்கோப்பை ஏமாற்றம் ஒரு காரணம். மேலும், இந்திய அணி இப்போது ஒரு Transition Period க்குள் செல்லப்போகிறது. டி20 உலகக்கோப்பையோடு விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதிலிருந்து பிசிசிஐ ஒரு புதிய அணியை கட்டமைக்கும் முனைப்போடு செயல்பட இருக்கிறது. நீண்ட காலமாக ஆடும் சீனியர் வீரர்களை மெதுமெதுவாக ஒதுக்கிவிட்டு இளம் இரத்தைத்தை இந்திய அணிக்குள் பாய்ச்சி அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்க பிசிசிஐ முனைப்புக் காட்டும். இந்திய அணிக்கு பல்வேறு வெரைட்டியான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இடக்கை பேட்ஸ்மேன்கள், இடக்கை பௌலர்கள், 150 கி.மீ வேகத்தில் வீசுபவர்கள், அதிகப்படியான ஆல்ரவுண்டர்கள் என இந்திய அணிக்கு எக்கச்சக்க தேவை இருக்கிறது. இதற்கான தேடுதல் வேட்டையை பிசிசிஐ இந்த சையத் முஷ்தாக் அலி தொடரிலிருந்து தொடங்க வாய்ப்புண்டு. உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஏமாற்றமளிக்கும் பெர்ஃபார்மென்ஸும் அதற்கான வெளியை உருவாக்கிவிட்டிருக்கிறது.


தோனி, கோலி, ரோஹித் வரிசையில் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டாராக நாம் கொண்டாடப்போகும் வீரர் இந்த சையத் முஷ்தாக் அலி சீசனில் சிறப்பாக செயல்படுபவராகக் கூட இருக்கக்கூடும்!