Sri Lanka WC 2023 Squad:
ஐசிசியின் குறிப்பிட்டிருந்த கட்-ஆஃப் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இன்று அதாவது செப்டம்பர் 26ஆம் தேதி இலங்கை தனது 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. குசல் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் தசுன் ஷனக கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு பின்னர் இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பு மாற்றி வழங்கப்படும் என செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் அதனை மறுக்கும் விதமாக மீண்டும் தசுன் ஷனகவிடமே கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை அணி நிர்வாகத்திடம் இருந்து தெரிவிக்கப்பட்ட மிகப்பெரிய செய்தி என்னவென்றால், அவர்களின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, தொடை தசைநார் காயத்தால் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் லங்கா பிரீமியர் லீக்கின் பிளேஆஃப்களின் போது லெக்-ஸ்பின்னர் ஹசரங்க தொடை வலியால் பாதிக்கப்பட்டார். இந்த காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் ஆசிய கோப்பை தொடரிலும் விளையாடவில்லை.
முன்னதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் ஹசரங்கவின் பங்கேற்பை உறுதிப்படுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வதாக அறிக்கை அளித்திருந்தது. எவ்வாறாயினும், பெரும் சிகிச்சை ஏற்பட்டால் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஹசரங்க கிரிக்கெட்டிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஹசரங்க ஒரு முக்கிய அங்கமாக இருந்தார், அவரால் இலங்கை சில போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியாவில் நடக்கவுள்ளா உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணியின் பங்களிப்பை உறுதிசெய்தார். இந்த உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் ஹசரங்க ஏழு போட்டிகளில் 22 விக்கெட்டுகளுடன் தொடரின் விக்கெட்-டேக்கர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
மற்ற வீரர்களைப் பொறுத்தவரையில், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர தோள்பட்டை காயத்திலிருந்து மீளத் தவறியதால் அவர் அணியில் இடம் பெறவில்லை. மறுபுறம், ஆசியக் கோப்பைத் தொடரைத் தவறவிட்ட தில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார இருவரும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர் என்பது இலங்கை அணிக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. ஆசியக் கோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தின் போது மதுஷங்க தசைகள் கிழிந்ததால் அவதிப்பட்டார்.
பாத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் பேட்டிங்கின் டாப் ஆர்டரில் இருப்பது அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. மிடில் ஆர்டரில் சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, சரித் அசலங்கா மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கேப்டன் ஷனகா முன்னிலையில் இருப்பதால், அணி ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு உள்ளது. தனஞ்சய, துனித் வெல்லலகே மற்றும் அசலங்க ஆகியோர் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரம் மதீஷ பத்திரன ஆகியோரின் பங்களிப்பு இலங்கை அணிக்கு வலுசேர்க்கும் எனலாம். வெல்லலகே, தனஞ்சய உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் மகேஷ் தீக்ஷன தலைமையில் சுழற்பந்து வீச்சும் மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
இலங்கை அணி: தசுன் ஷனக (கேப்டன்), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, கசுன் பத்திரகே, மதீஷா பத்திரித்த, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க
உலகக் கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் 29 ஆம் தேதி வங்காளதேசத்திற்கும், அக்டோபர் 2 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கும் எதிராகவும் இலங்கை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அவர்கள் தங்கள் போட்டியின் தொடக்க ஆட்டத்தை அக்டோபர் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளனர்.