சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரராக உலா வருபவர் ஹென்ரிச் கிளாசென். 33 வயதே ஆன இவர் தென்னாப்பிரிக்க அணியின் ஒருநாள், டி20 போட்டிகளில் தவிர்க்கவே முடியாத வீரராக உலா வருகிறார். இந்த நிலையில், கிளாசென் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதே ஆன கிளாசென் திடீரென ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்ளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

சோகமான நாள்:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு மிகவும் சோகமான நாள். எதிர்காலத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் எது சிறந்தது? என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால் எனக்கு முழுமையான அமைதியும் உண்டு.

நன்றியுடன் இருப்பேன்:

என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் நாளிலிருந்தே,  மிகப்பெரிய பாக்கியம் இது. நான் ஒரு சிறுவனாக உழைத்து கனவு கண்ட அனைத்தும் அது. நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்கும் சிறந்த நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கியுள்ளேன். தென்னாப்பிரிக்க  அணிக்காக விளையாடுவது என் வாழ்க்கையை மாற்றிய சிறந்த மனிதர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்பளித்தது.

மேலும் மக்களுக்கு நான் சொல்லும் நன்றி என்ற சொல் மட்டும் போதாது. தென்னாப்பிரிக்க அணியின் சீருடையை அணிவதற்கான எனது பாதை பெரும்பாலானவர்களை விட வித்தியாசமானது, மேலும் என் வாழ்க்கையில் சில பயிற்சியாளர்கள் என்னை நம்பினர். அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

மிகப்பெரிய மரியாதை:

என் மார்பில் தென்னாப்பிரிக்கா பேட்ஜுடன் விளையாடியது என் வாழ்க்கையில் மிகப்பெரிய மரியாதையாக இருந்தது, எப்போதும் இருக்கும். இந்த முடிவு எனக்கு அவ்வாறு செய்ய அனுமதிக்கும் என்பதால், என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நான் எப்போதும் தென்னாப்பிரிக்க அணியின் பெரிய ஆதரவாளராக இருப்பேன், மேலும் எனது வாழ்க்கையில் என்னையும் எனது அணியினரையும் ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்காக அசத்தல்:

2018ம் ஆண்டுதான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். 2019ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 104 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 60 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதங்கள் 11 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 141 ரன்களை எடுத்துள்ளார்.  

அதிகபட்சமாக 174 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல, 58 டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடி 1000 ரன்களை எடுத்துள்ளார். 5 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்துள்ளார். கிளாசென் ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார்.