நவி மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன் முறையாக உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இந்த வெற்றி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தங்களின் ஒரு முக்கிய முடிவாலேயே இந்த வெற்றி சாத்தியமானதாக தெரிவித்துள்ளார். அந்த முடிவு என்ன.? பார்க்கலாம்.
ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி வென்று அசத்திய நிலையில், இந்திய மகளிர் அணியின் முக்கிய வீராங்கனையும், நட்சத்திர ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனா, இந்த வெற்றி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வெற்றிக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், இந்த வெற்றியை தன்னுள் இன்னும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை என கூறியுள்ளார். பொதுவாக தான் கிரிக்கெட் மைதானத்தில் உணர்ச்சிவசப் பட்டதில்லை என்றம், ஆனால் இந்த வெற்றி நிஜமாகவே ஒரு மிகவும் நம்ப முடியாத ஒரு தருணமாக தனக்கு இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் தாங்கள் விளையாட சென்றபோதும், தங்கள் அனைவருக்குமே எத்தனையோ மன வருத்தங்கள் ஏற்பட்டதாகவும், பல சமயங்களில் இதயம் நொறுங்கியுள்ளதாகவும் ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.
மேலும், கடந்த கால ஏமாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய பொறுப்புணர்ச்சியாக மாறியதாகவும், அந்த அனுபவங்களை உறுதியாக மாற்றிக்கொண்டு, தங்கள் அனைவரின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த கடுமையாக உழைத்ததாகவும், இந்த ஒரு இரவிற்காக 45 நாட்கள் தாங்கள் தூங்காமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“முக்கியமான ஒரு முடிவை எடுத்தோம்“
அதோடு, கடந்த உலகக் கோப்பை தங்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக கூறிய ஸ்மிருதி மந்தனா, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறினார். அந்த தோல்விக்குப் பிறகுதான் தாங்கள் அனைவரும் ஒரு குறிக்கோளோடு இருந்ததாகவும், ஒரு முக்கிய முடிவை அந்த தருணத்தில் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, அனைவருமே உடல் தகுதியை அதிகரித்து, பலமான வீராங்கனைகளாக மாறுவது என்றும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீராங்கனைகளாக இருப்பது என்ற முடிவுவை எடுத்து உழைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், அணியின் வெற்றி என்பதைத் தாண்டி, மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக நம்புவதாகவும், கடந்த ஒன்றரை மாதங்களாக தாங்கள் பெற்ற ஆதரவை காணும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.
52 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி
நவி மும்பையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்யில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்க அணி. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 299 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் ஒருபுறம் நிலைத்து ஆடி 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் .ஆனால், மறுமுனையில் மற்ற வீராங்கனைகள் தொடர்ந்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறியதால், 45.3 ஓவர்களில், 246 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.
இதையடுத்து இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.