RCB Vs DC WPL Final 2026: மகளிர் ப்ரீமியர் லீக் இறுதிப்போட்டியில் தொடர்ந்து நான்காவது முறையாக தோல்வியுற்று, டெல்லி அணி சாம்பியன் பட்டத்தை இழந்துள்ளது.

ஸ்மிருதி மந்தனா - ஜார்ஜியாவின் மிரட்டல் கூட்டணி:

மகளிர் ப்ரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக பேட்டிங் செய்து,  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 203 ரன்களை குவித்தது. கேப்டன் ஜெமிமா 57 ரன்களும், லாரா 44 ரன்களும் விளாச, கடைசி கட்டத்தில் ஹென்றி 15 பந்துகளில் 25 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.

இமால இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீராங்கனை க்ரேஸ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேம்டன் ஸ்மிருதி மற்றும் ஜார்ஜியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 165 ரன்களை குவிக்க, அணி 19.4 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அதிகபட்சமாக மந்தனா 87 ரன்களும், ஜார்ஜியா 79 ரன்களும் குவித்து ஆர்சிபி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல வழிவகை செய்தனர்.

சரித்திரம் படைத்து RCB சாம்பியன்:

மகளிர் ப்ரீமியர் லீக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான, மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆடவருக்கான ஐபிஎல் போட்டிகளில் கூட, முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு கொல்கத்தா அணி 200 ரன்களை சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. ஆனால், அதையும் கடந்து 204 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து பெங்களூரு அணி சரித்திரம் படைத்துள்ளது. மகளிர் டி20 இறுதிப்போட்டிகளில் 175 ரன்களுக்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

டெல்லிக்கு நேர்ந்த சோகம்:

டெல்லி அணி கடந்த நான்கு சீசன்களிலும் லீக் சுற்றில் அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், நான்கு முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்துள்ளது. புதிய கேப்டன் ஜெமிமா கடந்த 3 சீசன்களில் இறுதிப்போட்டிகளில் கிடைத்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் தவிடுபொடியாகியுள்ளது. அதன்படி இரண்டு முறை மும்பை அணியிடமும், இரண்டு முறை பெங்களூரு அணியிடமும் டெல்லி அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

யாருக்கு என்ன விருது?

  • இறுதிப்போட்டியில் ஆட்டநாயகி விருது - ஸ்மிருதி மந்தனா
  • அதிக ரன்கள் விளாசிய வீராங்கனைக்கான ஆரஞ்சு தொப்பி - ஸ்மிருதி மந்தனா (377 ரன்கள்)
  • அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான ஊதா தொப்பி - ஷோபி டிவைன் (17 விக்கெட்டுகள்) குஜராத்
  • மிகவும் மதிப்புமிக்க வீராங்கனை - ஷோபி டிவைன்
  • சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் - க்ரேஸ் ஹாரிஸ் (178.19), ஆர்சிபி
  • எமர்ஜிங் ப்ளேயர் ஆஃப் தி சீசன் - நந்தினி சர்மா, டெல்லி

யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை?

  • சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு ரூ.6 கோடி பரிசு
  • 2வது இடம்பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசு
  • மிகவும் மதிப்புமிக்க வீரர் - ஷோபி டிவைன், ரூ.5 லட்சம்
  • ஆரஞ்ச் தொப்பி - ஸ்மிருதி மந்தனா, ரூ.5 லட்சம்
  • ஊதா தொப்பி - ஷோபி டிவைன், ரூ.5 லட்சம்
  • அதிகப்படியான சிக்சர்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர், ரூ.5 லட்சம்
  • அதிக டாட் பால்கள் - லாரன் பெல், ரூ.5 லட்சம்
  • சிறந்த நுணுக்கமான பந்து வீச்சாளர் - ஷோபி டிவைன், ரூ.5 லட்சம்
  • சிறந்த ஸ்ட்ரைக் ரேட் - க்ரேஸ் ஹாரிஸ் (178.19), ரூ.5 லட்சம்
  • எமர்ஜிங் ப்ளேயர் ஆஃப் தி இயர் - நந்தினி சர்மா, ரூ.5 லட்சம்
  • ஃபேர் ப்ளே விருது - மும்பை இந்தியன்ஸ், ரூ.5 லட்சம்
  • இறுதிப்போட்டியில் ஆட்டநாயகி விருது - ஸ்மிருதி மந்தனா, ரூ.2.5 லட்சம்