டி20 உலகக் கோப்பை 2024ன் நான்காவது போட்டியில் ஒருமுறை சாம்பியனான இலங்கை அணியும், இரண்டு முறை அரையிறுதி வரை சென்ற தென்னாப்பிரிக்கா அணியும் இன்று மோதுகிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 8 மணி தொடங்குகிறது. 


இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் விளையாடுகின்றன. இலங்கை அணி விளையாடிய இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றது. மறுபக்கம், தென்னாப்பிரிக்கா சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக டி20 ஐ தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. 


நாசாவ் கவுண்டியின் பிட்ச் ரிப்போர்ட்: 


நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்சானது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக கருதப்படுகிறது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும், அதிக ஸ்கோரிங் பதிவு செய்யும் போட்டியாக் இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.  இங்கு நடந்த கடைவி டி20 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயிற்சி ஆட்டத்தில் மொத்தமாக 14 விக்கெட்களும், 304 ரன்களும் எடுக்கப்பட்டது. 


வார்ம்-அப் போட்டியில் பார்த்தது போல் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்கோரை அடிப்பது இங்கு மிகவும் கடினமாக இருக்கும். இங்குள்ள அவுட்பீல்டும் மெதுவாக இருப்பதால், பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். 


இலங்கை vs தென்னாப்பிரிக்கா போட்டியின் வானிலை அறிக்கை:


இலங்கை vs தென்னாப்பிரிக்கா போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்குகிறது. வானிலை ஓரளவு வெயிலாகவும், இதமாகவும் இருக்கும். வெப்பநிலை சுமார் 25 டிகிரி இருக்கும். மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது. 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே மொத்தம் 17 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில், அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணி 12 போட்டிகளில் வெற்றிபெற்று முன்னிலை உள்ளது. இலங்கை அணி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை நீண்ட காலமாக வெற்றிக்காக காத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணியின் கடைசி வெற்றி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அமைந்தது. அதே சமயம் இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணியே 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


இலங்கை:


 பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய் டி சில்வா, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்க (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனக, மகேஷ் தீக்ஷனா, மதிஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க.


தென்னாப்பிரிக்கா:


குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கல்டன், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.


யார் மீது அதிக கவனம் இருக்கும்..? 


இலங்கை அணியில் வனிந்து ஹசரங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், சதீர சமரவிக்ரமா, மதிஷா பதிரனா ஆகியோர் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. அதே சமயம், தென்னாப்பிரிக்கா அணியில் எய்டன் மார்க்ரம், குயிண்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், என்ரிக் நோர்கியா, ககிசோ ரபாடா ஆகியோரும் தங்களது திறமையை வெளிப்படுத்தலாம்.