Asia Cup 2023; ஆசிய கோப்பைத் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகள் குரூப் ‘ஏ’விலும் இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் குரூப் ‘பி’யிலும் இடம் பெற்றுள்ளன. குழு அளவிலான போடியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். குரூப் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இவ்வகையில் ஏற்கனவே குரூப் ‘ஏ’வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளது. குரூப் ‘பி’யில் இன்னும் அடுத்த சுற்றுக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளது. மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பது முடிவாகாததால், இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்ற நிலையில் இரு அணிகளும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர், இறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 121 ரன்களில் இருந்த போது அணியின் 4வது விக்கெட்டும் பறிபோக, அடுத்த சுற்றுக்கு முன்னேறவேண்டுமானால் ஆஃப்கானிஸ்தான் அணி 35.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற நிலையில் இருந்தது. அதன் பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரன்ரேட்டை முகமது நபி மற்றும் ஹஸ்மதுல்லா ஷாகிதி கூட்டணி மளமளவென உயர்த்தியது. குறிப்பாக அதிரடியாக ஆடிவந்த முகமது நபி 24 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் விளாசினார். 24 பந்துகளில் அரைசதம் விளாசியதால், முகமது நபி அதிவேகமாக அரைசதம் விளாசிய ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமைப் பெற்றார். இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரன போட்டியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி 27 பந்தில் அடித்ததுதான் அதிவேக அரைசதமாக இருந்தது.
சிறப்பாக விளையாடி வந்த நபி, தீக்ஷன பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். இவர் 32 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 65 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.