Shreyas Iyer: மயங்கி விழுந்த ஸ்ரேயாஸ், உடல்நிலையில் முன்னேற்றமா? சிட்னி விரையும் பெற்றோர் - ஐசியு அப்டேட்
Shreyas Iyer Health Update: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shreyas Iyer Health Update: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக, ட்ரெஸ்ஸிங் அறையில் மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மயங்கி விழுந்த ஸ்ரேயாஸ் அய்யர்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பின்பக்கமாக ஓடிச்சென்று ஸ்ரேயாஸ் அய்யர் லாவகாமாக கேட்ச் பிடித்து அசத்தினார். ஆனால், அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த ஸ்ரேயாஸ் சக வீரர்களின் உதவியுடன் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். வீரர்களுக்கான ஓய்வு அறைக்கு சென்றபோது, ஸ்ரேயாஸ் மயங்கி விழுந்ததாகவும், உயிருக்கு ஆபத்த்தான நிலையை எட்டியதை தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்ணீரலில் காயம் - ஐசியுவில் அனுமதி:
பலமாக கீழே விழுந்ததில் எலும்புகூடு பகுதியில் காயம் ஏற்பட்டு, தீவிரமான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் எடுத்த சோதனைகள் தொடர்பான தகவல்களின்படி, ஸ்ரேயாஸிற்கு மண்ணீரல் சிதைவு ஏற்பட்டு இருகலாம் என்றும், இது உட்புற ரத்தக்கசிவிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதையடுத்து முதல் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். குணமடையும் தன்மையை பொறுத்து, இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஸ்ரேயாஸ் ஐசியுவில் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.
ஐசியுவை விட்டு வெளியேறிய ஸ்ரேயாஸ்
ஷ்ரேயாஸின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், அவர் நிலையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளாராம். இது உறுதியாகும்பட்சத்தில் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதை உணர முடிகிறது. ஆனாலும், அடுத்த சில நாட்களுக்கு அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க வேண்டி உள்ளதாம். பிசிசிஐ-யின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிட்னியிலேயே தங்கியிருந்து, ஸ்ரேயாஸின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறாராம்.
சிட்னி விரையும் ஸ்ரேயாஸின் பெற்றோர்:
இதனிடையே, ஸ்ரேயாஸின் பெற்றோரில் ஒருவரை விரைந்து சிட்னிக்கு அழைத்து வர பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளதாம். ஸ்ரேயாஸின் சகோதரி ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்கவிருந்தார், அதற்கான ஆவண வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, ஸ்ரேயாஸின் பெற்றோரில் ஒருவர் அவருடன் செல்வது சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.
மண்ணீரல் காயம் ஆபத்தானது ஏன்?
மேல் இடது அடிவயிற்றில் உள்ள மென்மையான, கைப்பிடி அளவிலான உறுப்பான மண்ணீரல், உடலின் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளில் கால் பகுதியை வடிகட்டி சேமித்து, தொற்றுகளை எதிர்த்துப் போராட வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்குகிறது. அதன் நுட்பமான அமைப்பு மற்றும் மெல்லிய வெளிப்புற காப்ஸ்யூலால் லேசான அதிர்ச்சியால் கூட காயங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. எலும்பு முறிவு கடுமையான உள் ரத்தக்கசிவை ஏற்படுத்தும் மற்றும் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது, பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.




















