உலக கிரிக்கெட் அளவில் ஒரு பவுலர் இரண்டு கைகளிலும் பந்துவீசுவது அரிதிலும் அரிதான ஒன்று. ஆனால் இங்கு 22 வயதான மோகித் ஹரிஹரன் என்ற இளைஞர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கைகளிலும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கைகளிலும் பந்து வீசி அசத்தியுள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்காக இன்று களமிறங்கிய மோஹித் ஹரிஹரன், சென்னை சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக தனது திறமையை வெளிப்படுத்தினார். 






தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2வது போட்டியில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கில்லீஸ் அணியும் விளையாடி வருகிறது. 


முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் பாபா அபராஜித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் பால் களமிறங்கினர். 


இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட சென்னை அணியின் ஸ்கோர் எகிற தொடங்கியது. இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சேலம் அணியை சேர்ந்த மோஹித் ஹரிஹரன் என்ற 22 வயதான வீரர் வலது கை பேட்ஸ்மேனான ஜெகதீசன் பேட்டிங் செய்தபோது வலது கையிலும், இடது கை பேட்ஸ்மேனான பிரதோஷ் பால் பேட்டிங் செய்தபோது இடது கையில் பந்துவீசி அசத்தினார். 






மேலும், சென்னை சூப்பர் கில்லீஸ் அணி 91 ரன்கள் எடுத்திருந்தபோது 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த ஜெகதீசனை தனது வித்தியாசமான பந்துவீச்சால் மோஹித் ஹரிஹரன் வெளியேற்றினார். இவரின் இந்த பந்து வீச்சு அனைவரையும் ரசிக்கும்படி செய்து, பலரும் இவரை ட்விட்டரில் வாழ்த்தி வருகின்றன. 






முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு காஞ்சி வீரன்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் ஹரிஹரன் திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிராக இரு கைகளிலும் பந்துவீசி ட்ரெண்ட் ஆனார். அப்போது அவருக்கு 18 வயது மட்டுமே. அந்த வீடியோவை டிஎன்பிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.