ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


தென்னாப்பிரிக்கா- நியூசிலாந்து மோதல்:


இதுவரை விளையாடி உள்ள 6 போட்டிகளில் 5 வெற்றி 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியும்,  4 போட்டிகளில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வி என புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதின. இந்த போட்டி மகாராஷ்டிராவில் நடைபெற்றது. 


அசத்திய நியூசிலாந்து:


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர் குயின் டி காக் அதிரடியாக விளையாடினார். முன்னதாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அந்த அணியின் கேப்டன், தெம்பா பவுமா 28 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய வான்டெர் டு சென் மற்றும் குயின் டி காக் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து  சிறப்பாக விளையாடினார்கள்.


அதன்படி 40 ஓவர்கள் வரை களத்தில் நின்ற குயின்டன் டி காக் 116 பந்துகளில்,  10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 114 ரன்கள் குவித்தார். மறுபுறம் வான்டெர் டு சென்னும் அதிரடி காட்டினார். 118  பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம்  133 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், வந்த டேவிட் மில்லர் 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 53 ரன்கள் எடுத்தார்.  இவ்வாறாக அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி.


மோசமாக விளையாடிய நியூசிலாந்து: 


தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினார்கள். அந்த வகையில், டெவோன் கான்வே 6 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று  2 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார்.  பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


மறுபுறம் பொறுமையாக விளையாடிய வில் யங் 37 பந்துகள் களத்தில் நின்று 33 ரன்கள் எடுத்தார். சரிவில் இருந்த அந்த அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டாம் லாதம் 15 பந்துகள் களத்தில் நின்ற 4 ரன்களில் நடையைக் கட்ட, மறுபுறம் டேரில் மிட்செல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து அணி. இதனால், தென்னாப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் 9 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.