இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்பதில் அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது?


 


இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு பின்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த விவாகரம் தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தளத்திற்கு கூறிய தகவலன்படி, “இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான். அவர் தான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவரே அடுத்த கேப்டனாக செயல்படுவார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு பிறகு வெளியாகும். 


 


ரோகித் சர்மாவின் காயங்கள் மற்றும் அவருடைய உடற்தகுதி மட்டுமே கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மூன்று வகை போட்டிகளிலும் கேப்டனாக அவர் செயல்படும் போது அவருடைய உடற்தகுதியில் அவர் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து அவரிடம் கலந்து ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 


 


மேலும் இந்திய டெஸ்ட் அணியின் புதிய துணை கேப்டனாக கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் அல்லது பும்ரா ஆகிய மூவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அடுத்த டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை வர உள்ளதால் ரோகித் சர்மாவிற்கு ஒரு சில டெஸ்ட் தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டு அதில் துணை கேப்டனாக அறிவிக்கப்படும் வீரர் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. 


 


இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்பிலிட் கேப்டன்சிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவாக இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால் ரோகித் சர்மாவே அடுத்த டெஸ்ட் கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்பாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகவே அடுத்து வரும் இலங்கை டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மாவே புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் மற்றும் துணை கேப்டன் யார் என்பதில் அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: கையிலே ஆகாசம்..ஒரே கையில் நீ செஞ்ச சாகசம் - மிரள வைத்த மேக்ஸ்வேலின் கேட்ச் வீடியோ!