Rohit Sharma: கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து, ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி:
மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதின. அதன் முடிவில் இந்திய 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி, தனது இரண்டாவது டி உலகக் கோப்பையை வென்றது. அதோடு, கடந்த 11 ஆண்டுகளாக எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியவில்லை என்ற, இந்திய அணியின் மோசமான பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம், கேப்டன் என்ற முறையில் ரோகித் சர்மாவும் புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
ஐசிசி தொடர்களில் தடுமாறிய இந்தியா:
இந்திய அணி கடந்த 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பிறகு, எந்தவொரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது. அதன்படி,
- 2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும், இலங்கை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது
- 2015ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது
- 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப்போட்டி வரை முன்னேறினாலும், மேற்கிந்திய தீவுகளிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.
- 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது
- 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும், அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது
- 2021ம் ஆண்டு டி20 உலகக் க்கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது
- 2022ம் ஆண்டு டி20 உலகக் க்கோப்பையில் அரையிறுதிப்போட்டி வரை முன்னேறினாலும், இலங்கை அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.
- 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது
சரித்திரம் படைத்த ரோகித் சர்மா:
2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை தொடர்ந்து, தோனி மற்றும் கோலி போன்ற ஜாம்பவன்கள் தலைமையில் இந்திய அணி களமிறங்கினாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவர்களை தொடர்ந்து வந்த ரோகித் சர்மாவும் அதேபோன்று ஐசிசி தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் வரை முன்னேறினாலும் கோப்பைய வெல்ல முடியாமல் தடுமாறினார். இருப்பினும் தொடர்ந்து உறுதியாக செயல்பட்ட நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணிக்காக ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக கபில் தேவ் மற்றும் தோனி மட்டுமே, இந்திய அணிக்காக ஐசிசி பட்டங்களை வென்றுள்ளனர்.
எலைட் லிஸ்டில் ரோகித் சர்மா:
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளின், ஐசிசி தொடர் இறுதிப் போட்டிகளுக்கும் வழிநடத்திய ஒரே கேப்டன் என்ற பெருமையை நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பெற்று இருந்தார். இந்நிலையில் அந்த பெருமையை தற்போது ரோகித் சர்மாவும் பெற்றுள்ளார். அதன்படி, 2023ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும், அதே ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும், நடப்பாண்டு டி20 உலகக் கோப்பைக்கும் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்தியுள்ளார்.
முதல் இரண்டு கேப்டன்கள்:
- 1983ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது
- தோனி தலைமையிலான இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையையும், 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது.