Rohit Sharma: "Sorry" மைதானத்திலே மன்னிப்பு கேட்ட ரோகித் சர்மா - நடந்தது என்ன?
IND vs BAN Champions Trophy 2025: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஜாகர் அலியின் கேட்ச்சை விட்டதற்கு மைதானத்திலே மன்னிப்பு கேட்டார்.
சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தான் நாட்டில் தொடங்கியது. இந்ததொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன் இன்று ஆடியது. வங்கதேசம் அணி முதலில் பேட் செய்தது.
கேட்ச்சை விட்ட ரோகித்:
ஆட்டத்தைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு முகமது ஷமி, ஹர்ஷித் ராணா தனது வேகத்தால் தொல்லை தந்தனர். ஷமி வேகத்தில் செளமியா சர்காரும், ராணா வேகத்தில் ஷாண்டோவும் டக் அவுட்டாக அக்ஷர் சுழலில் வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணிக்காக போராடிய தன்ஷித் ஹாசனை அக்ஷர் படேல் தனது சுழலால் வெளியேற்றினார். அவர் அவுட்டான அடுத்த பந்திலே அனுபவமிக்க முஷ்பிகுர் ரஹீம் டக் அவுட்டானார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஷர் படேலுக்கு ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது.
மன்னிப்பு கேட்ட ஹிட்மேன்:
அடுத்து அவர் வீசிய பந்தில் அப்போது களமிறங்கிய ஜாகர் அலி பேட்டில் பட்டு, ஸ்லிப்பில் நின்ற கேப்டன் ரோகித் சர்மா கைக்கே சென்றது. மிக எளிதான கேட்ச்சை கேப்டன் ரோகித் சர்மா கோட்டை விட்டார்.
கேட்ச்சை விட்டது மட்டுமில்லாமல் அக்ஷர் படேலின் ஹாட்ரிக் சாதனையும் தன்னால் பறிபோனதால் ரோகித்சர்மா வேதனை அடைந்தார். அவர் மைதானத்திலே தனது கைகளால் வேகமாக அடித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார். பின்னர், இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டு தனது மன்னிப்பையும் தெரிவித்தார்.
ரோகித் சர்மா கோட்டை விட்ட கேட்ச்சால் ஆட்டத்தின் போக்கே மாறியது என்றே சொல்லலாம். அதன்பின்பு, 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தெளகித் - ஜாகர் அலி நிதானமாக ஆடி வங்கதேசம் அணி 150 ரன்களை கடக்க உதவினார். ஜாகர் அலி நங்கூரமிட்டு அரைசதம் விளாசினார்.
வங்கதேசம் அபாரம்:
9வது ஓவரில் சேர்ந்த இந்த ஜோடி 42வது ஓவரில்தான் ஆட்டமிழந்துள்ளனர். ஜாகர் அலி 114 பந்தில் 4 பவுண்டரியுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷமியின் பந்தில் அவர் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 100 ரன்களை கடக்குமா? என்ற நிலையில் இருந்த வங்கதேசம் 200 ரன்களை கடந்து சிறப்பாக ஆடியது. ஜாகர் அலி ஆட்டமிழந்தாலும், தெளகித் ஹிர்தோய் தனி ஆளாக வங்கதேச அணிக்காக சிறப்பாக ஆடினார்.