சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இவர் இந்த சாதனையை 98வது டெஸ்ட்டில் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 500 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே சர்வதேச டெஸ்ட்டில் 619வது விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். அஸ்வின் தனது 500வது விக்கெட்டாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கார்வ்லேவை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார்.
இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து அஸ்வின் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் விளையாடினால் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
அஸ்வின் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டினை கைப்பற்றிய நிலையில், அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினை கைப்பற்றிய 9வது வீரர் என்ற பெருமையையும், இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
சென்னை மண்ணின் வீரர்:
500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட பழைய படத்தினைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் தெரிவித்துள்ள வாழ்த்தில், “ சாதனைகளை முறியடித்து கனவுகளை வெல்லும் சென்னை மண்ணின் வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகள்.
சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தான் வீசும் ஒவ்வொரு சுழற்பந்திலும் பல்வேறு சாதனைகளை உருவாக்கி வருகின்றார். 500 விக்கெட்டுகள் கைப்பற்றி மிகச் சிறப்பான சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார். சென்னை மண்ணின் சொந்த ஜாம்பவானுக்கு இன்னும் பல விக்கெட்டுகளும் வெற்றிகளும் வந்து சேர வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில், வாழ்த்துகள் அஸ்வின். நம்பமுடியாத சாதனையப் படைத்து எங்களை பெருமைப்படுத்திவிட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் அஸ்வின் பேட்டிங்கில் தனி முத்திரை பதித்துள்ளார் என்றே கூறவேண்டும். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 139 இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அதில் 5 சதங்களும் 14 அரைசதங்களும் விளாசியுள்ளார்.