கட்டாயத்தின் பேரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ஆன ராகுல் டிராவிட், தனது பயணத்தை வெற்றியுடன் முடிப்பார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ராகுல் டிராவிட் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தற்போது 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன், இந்திய அணியுடனான டிராவிட்டின் பயணமும் முடிவுக்கு வந்தது.
இந்திய அணிக்காக ராகுல் டிராட்விட்டின் பயிற்சி காலம் எப்படி இருந்தது..?
ராகுல் டிராவிட் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு, டிராவிட் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். இவரது வழிகாட்டுதலின் கீழ்தான், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், சுப்மன் கில் போன்ற நட்சத்திர வீரர்கள் உருவானார்கள். ரவி சாஸ்திரியைப் போலவே, ராகுல் டிராவிட்டும் வலுவான இந்திய அணியை தயார்படுத்த உழைத்தார். அதுவே தற்போது இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தது.
டிராவிட்டின் பயிற்சியின் கீழ், இந்தியா 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அதில் அணி 41 முறை வென்றது. அதேபோல், இந்திய அணி 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வென்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு டெஸ்ட் தொடரை மட்டும் இழந்து 5 தொடர்களை வென்று 2ஐ டிரா செய்தது. கடந்த 2023ம் ஆண்டு ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே நேரத்தில், ராகுல் டிராவிட்டின் பயிற்சி வாழ்க்கையின் ஒரு பெரிய சாதனை என்னவென்றால், 2024 இல், இந்தியா மூன்று வடிவங்களின் தரவரிசையில் முதல் இடத்திற்கு வந்திருந்தது.
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா இறுதிப் போட்டியில் தோற்றிருந்தாலும், குரூப் ஸ்டேஜில் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே இல்லாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 240 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் மீதம் இருந்த நிலையில் சாதித்தது. இந்த தோல்வி நிச்சயம் ராகுல் டிராவிட்டின் பயிற்சி வாழ்க்கையில் கறையாக இருந்திருக்கும். டிராவிட்டின் கீழ் இந்தியா பல ஐசிசி போட்டிகளை இழந்திருந்தாலும், 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வெற்றி அனைத்தையும் முறியடித்து சாதனையாக கொடுத்தது.
கட்டாயத்தால் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்:
கடந்த 2021ம் ஆண்டு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, இந்திய அணியில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அப்போதைய பிசிசிஐ தலைவரும், ராகுல் டிராவிட்டின் நண்பருமான சவுரவ் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ராகுல் டிராவிட்டை கட்டாயப்படுத்தினர். அதற்கு முன் வரை ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும், அண்டர் -19 அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தர். அதன் காரணமாக இந்தியாவின் பயிற்சியாளராக டிராவி ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கங்குலி - ஜெய் ஷாவின் கட்டாயத்தால் ஒப்புக்கொண்டார். 13 ஆண்டுகளாக இந்திய அணிக்கு இருந்த ஐசிசி கோப்பையின் வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பிரியாவிடை கொடுத்தார் ராகுல் டிராவிட்.