இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் (The Wall) என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது தலைமை பயிற்சியின் கீழ் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று அதை, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அர்பணிக்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முயற்சிக்கும்.
இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ராகுல் டிராவிட் களமிறங்கும்போதே எதிரணியினருக்கு அல்லு விட்டுவிடும். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் என்றால், எதிரணியினர் வீசும் அசூர வேக பந்துகளை அசராமல் சுவர் போல நின்று தடுப்பார். அதுவும் இம்மி அளவு கூட பிசிறு தட்டாமல் அதே இடத்தில் நங்கூரம்போல் நச்சென்று நிற்கும். இதனாலையே, “The Wall” என்று ரசிகர்களால் ராகுல் டிராவிட் செல்லமாக அழைக்கப்படுகிறார். உலகெங்கிலும் உள்ள அனைத்து சிறந்த வீரர்களின் பந்து வீச்சு தாக்குதல்களுக்கும் எதிராக நின்று எத்தனை மணிநேரம், எத்தனை நாள் வேண்டுமானாலும் பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர்.
ராகுல் டிராவிட், 1996ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். அன்று தொடங்கிய அவரது கிரிக்கெட் பயணம் இன்றுவரை தலைமை பயிற்சியாளராக தொடர்கிறது. இதுவரை ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்களுடன் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். பின்னர் அதே 1996ம் ஆண்டு டிராவிட் சிங்கப்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியிலும் களமிறங்கினார். இதுவரை 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்களுடன் 10,889 ரன்களை குவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் கடந்த 2012ஆம் ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ராகுல் டிராவிட்டின் சாதனைகள்:
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 210 கேட்சுகள் பிடித்து, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் எடுத்தவர் என்ற சாதனையை ராகுல் டிராவிட் படைத்துள்ளார்.
- தொடர்ந்து நான்கு இன்னிங்ஸ்களில் சதம் அடித்த ஒரே இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்தான். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. ஆகஸ்ட் 8, 2002 முதல் அக்டோபர் 9, 2002 வரை இங்கிலாந்துக்கு எதிராக 3 சதங்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு சதம் அடித்த போது டிராவிட் இந்த சாதனையைப் படைத்தார்.
- குறைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 9000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனை ராகுல் டிராவிட் படைத்தார். இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் 9000 ரன்களை எட்டினார். அதன்பிறகு, கடந்த 2011 ம் ஆண்டு 103 டெஸ்ட்களில் குமார் சங்கக்கார 9000 ரன்களை எடுத்து டிராவிட்டின் சாதனையை சமன் செய்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் டிராவிட் 13,288 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோருடன், 90 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டமிழந்தவர் என்ற பட்டியலில் ராகுல் டிராவிட் பெயரும் உள்ளது. இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் 90 ரன்களுக்கு மேல் 100 ரன்களுக்குள் 10 முறை ஆட்டமிழந்துள்ளனர்.