டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை டி20 போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருன் இந்த போட்டிகளில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.


அந்த வகையில் நேற்று (ஜூன் 6) நடைபெற்ற 11 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியை எதிர் கொண்டு விளையாடியது.


தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி:


இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுக்க ஆட்டம் சமநிலையானதால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது.


அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்கள் எடுத்தது. பின்னர் 19 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.  


பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?


அமெரிக்க அணியின் வெற்றி அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் இந்த வெற்றி குறித்து அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”டாஸை வென்று முதலில் பந்துவீச வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். முதல் அரைமணி நேரத்திற்கு மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருக்கும். நாங்களும் திட்டமிட்டபடியே பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை எடுத்தோம்.


இந்த மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி சிறியது. அதை மனதில் வைத்துப் பார்க்கையில் 160 எடுக்கக்கூடிய ஸ்கோராகத்தான் தெரிந்தது. கடைசி ஓவரில் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. க்ரீஸில் இருந்த பேட்டர்களுக்கு நாங்கள் எந்த மெசேஜையும் சொல்லி அனுப்பவில்லை. அவர்கள் இருவருமே அவர்களின் பணியை சிறப்பாகச் செய்து முடித்துவிட்டனர். எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை.


அழுத்தமெல்லாம் பாகிஸ்தான் அணிக்குதான். ரசிகர்களிடமிருந்து எங்களுக்கு போதிய ஆதரவு இருக்காது என்பது எங்களுக்கு முன்பே தெரியும். பாகிஸ்தானுக்குதான் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருக்கும், ஆனால் அதுவே அவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் எங்களுக்குத் தெரியும்.


கூடவே நாங்களும் சிறப்பாக ஆடினால் பாகிஸ்தானை கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும் என நினைத்தோம். களச்சூழலை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். ஓவர் தி விக்கெட்டில் வந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கட்டர்களையும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளையும் சிறப்பாக வீசினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம்” என்று கூறினார்.


அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தாவர் என்பது குறிப்பிடத்தக்கது.