கடந்த சில ஆண்டுகளாக உலக கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் அசாமுக்கும் இடையே இருவரது பேட்டிங் திறன் குறித்து ஒரு ஒப்பீடு இருந்து வருகிறது. கடந்த 2019 ம் ஆண்டிற்கு பிறகு, விராட் கோலி மூன்று பார்மேட்டிலும் மிகவும் மோசமான பார்மில் இருந்தார். பார்ம் அவுட் காரணமாக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அவரால் ஒரு சர்வதேச சதத்தை கூட அடிக்க முடியவில்லை.
கடந்த 2022 ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுபயணத்தின்போது சொற்ப ரன்களில் தொடர்ந்து ஆட்டமிழந்தார். அப்போது, கோலியை ஊக்குவிக்கும் வகையில் பாபர் அசாம் தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலியை டேக் செய்து "இந்த நேரமும் கடந்து போகும்" என்று பதிவிட்டு இருந்தார்.
அந்த நேரத்தில் விராட் கோலி பார்ம் அவுட் காரணமாக அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மட்டுமே அப்போது ஏன்? தான் கோலிக்கு ஆதரவாக பதிவிட்டேன் என தற்போது மவுனம் கலைத்துள்ளார்.
இதுகுறித்து ஐசிசி டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில் பேசிய பாபர் அசாம், ”ஒரு வீரராக இதுபோன்ற கடினமான காலங்களை ஒருவர் கடக்க வேண்டும். அப்போது ட்வீட் செய்து ஊக்கப்படுத்தினால் அவர்களுக்கு உதவியாக இருக்கும், நம்பிக்கையும் அதிகரிக்கும் என நினைத்தேன். ஒரு வீரராக, மோசமான கட்டத்தில் செல்லும் ஒவ்வொரு வீரரையும் ஆதரிக்க வேண்டும்.
கடினமான காலங்களில் தான் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் இந்த நேரத்தில், நான் இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன், மேலும் சில நேர்மறையான விஷயங்கள் வெளிவரும், இந்த பார்ம் அவுட்டும் ஒரு பிளஸ் பாயிண்ட்தான்” என்று தெரிவித்தார்.
பாபர் அசாம் தற்போது ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் மற்றும் டி20 பார்மேட்டில் முறையே 2 மற்றும் 3வது இடத்திலும் இருக்கிறார்.
சத வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்த கோலி:
2022ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கோப்பையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதத்துக்கான காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகும், ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார். இருப்பினும், டெஸ்ட் வடிவத்தில் அவரது கடைசி சதம் 2019 இல் வங்காளதேசத்திற்கு எதிராக கொல்கத்தா மைதானத்தில் பதிவானது. அவரது அடுத்த டெஸ்ட் சதத்திற்காக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.