IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
IND Vs Pak ICC T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான லீக் போட்டியில் விளையாட, பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

IND Vs Pak ICC T20 World Cup: கிரிக்கெட்டின் உணர்வை பாதுகாப்பதற்காக இந்தியா உடனான போட்டியில் பங்கேற்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
திட்டப்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டி:
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்ற தங்களது முடிவினை பாகிஸ்தான் திரும்பப் பெற்றுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவில் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தங்களது வீரர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் உலகின் விலைமதிப்புமிக்க கிரிக்கெட் போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என நிலவி வந்த சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியின் மதிப்பை சிலர் 4000 கோடி ரூபாய் என மதிப்பிடுகின்றனர். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் சம்மேளனங்களுடன், சர்வதேச கிரிக்கெட் சம்மேளன குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம் சொன்ன காரணம்
பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட முடிவுகளாலும், நட்பு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்றும், ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வரும் 15ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்க அரசாங்கம் வலியுறுத்துகிறது. கிரிக்கெட்டின் உணர்வை பாதுகாக்கவும் மற்றும் பங்கேற்கும் அனைத்து நாடுகளிலும் இந்த உலகளாவிய விளையாட்டின் தொடர்ச்சியை ஆதரிப்பதற்குமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்ற முடிவை கைவிடுமாறு, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்திற்கு நிவாரணம்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தையின் போது, வங்கதேசத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கக் கூடாது என பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவற்றில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,
- ஏற்கனவே டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு பயணிக்க மறுத்ததால் வங்கதேச அணிக்கு நிதி, விளையாட்டு அல்லது நிர்வாக அபராதம் ஏதும் விதிக்கப்படாது
- வங்கதேச கிரிக்கெட் சம்மேளனம் தகராறு தீர்வுக் குழுவை (டிஆர்சி) அணுக விரும்பினால், அதை அணுகும் உரிமையை விதிகளின்படி தக்க வைத்துக் கொண்டுள்ளது
- கூடுதலாக 2028 மற்றும் 2031 க்கு இடையில் ஒரு சர்வதேச கிரிக்கெட் நிகழ்வை நடத்தும் உரிமையை வங்கதேசத்திற்கு வழங்கவும் ஐசிசி ஒப்புக்கொண்டது.
இதையும் படியுங்கள்: IND Vs Pak T20 World Cup: 10 நொடிக்கு ரூ.16 லட்சம், ரூ.420 கோடி ப்ராஜக்ட், 50 கோடி வியூவர்ஸ் - ஐசிசி வழிக்கு வரும் பாக்.,?
நிதி இழப்பு அபாயம்:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் சுற்று போட்டி திட்டமிட்டபடி நடைபெறாமல் இருந்தால், சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திற்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. இதன் விளைவாக பாகிஸ்தான் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்பட்டது. இருப்பினும் பல தரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாகிஸ்தான் தனது முடிவை மாற்றி, இந்தியா உடனான போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளது.





















