சர்வதேச கிரிக்கெட் அணிகளில் இலங்கை அணிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. ஜெயசூர்யா, அரவிந்த் டி சில்வா, முத்தையா முரளிதரன், மலிங்கா, ஜெயவர்தனே, சங்ககரா போன்ற ஜாம்பவான்களை உருவாக்கிய இலங்கை அணி சர்வதேச அளவில் பல்வேறு தகர்க்க முடியாத சாதனைகளை இன்றளவும் தன்வசம் வைத்துள்ளது.


தகர்க்க முடியாத சாதனை:


அதில் மிகப்பெரிய சாதனை ஒரு இன்னிங்சில் ஒரு அணி விளாசிய அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையே ஆகும். அந்த சாதனையை இலங்கை அணி படைத்த நாள் இன்று ஆகும். அதுவும் 952 ரன்களை குவித்து இலங்கை அணி அந்த மகத்தான சாதனையை படைத்தது இந்திய அணிக்கு எதிராகவே ஆகும்.


சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. 1997ம் ஆண்டு நடந்த அந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக அந்தாண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி கொழும்பு நகரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. டாஸ் வென்ற சச்சின் இமாலய இலக்கை குவிக்கலாம் என்ற நோக்கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


சச்சின், அசார் சதம்:




ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நயன் மோங்கியா 7 ரன்களில் அவுட்டானார். ஆனாலும், அடுத்து ஜோடி சேர்ந்த சித்து – டிராவிட் ஜோடி அசத்தலாக ஆடியது. அபாரமாக ஆடிய சித்து சதம் அடித்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் சச்சின் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய டிராவில் 69 ரன்களில் ஆட்டமிழக்க, சச்சின் – அசாருதீன் ஜோடி இலங்கை அணிக்கு தண்ணி காட்டியது. இருவரும் இணைந்து ரன்களை குவித்ததால் இந்திய அணி ஸ்கோர் மளமளவென எகிறியது.


அபாரமாக ஆடிய இருவரும் சதம் விளாசினர். சச்சின் 143 ரன்களுக்கும், அசாருதீன்  126 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. வலுவான ஸ்கோர் குவித்ததால் இலங்கை அணிக்கு சவால் விடலாம் என்ற இந்திய அணிக்கு அடுத்துதான் சவாலே ஆரம்பித்தது. சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு அட்டப்பட்டு 26 ரன்களில் அவுட்டாக. அடுத்து ஜெயசூர்யா – ரோஷன் மகானாமா ஜோடி சேர்ந்தனர்.


முச்சதம் விளாசிய ஜெயசூர்யா, இரட்டைசதம் விளாசிய ரோஷன்:


இருவரும் இணைந்து இந்திய அணியை நிலைகுலைய வைத்துவிட்டனர். 39 ரன்களில் ஜோடி சேர்ந்த இவர்களை பிரிக்க இந்திய கேப்டன் சச்சின் வெங்கடேஷ் பிரசாத், குருவில்லா, ராஜேஷ் சவுகான், கும்ப்ளே, நிலேஷ் குல்கர்னி ஆகியோரை பயன்படுத்தி பார்த்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.




களத்தில் நங்கூரமிட்ட இந்த ஜோடியால் இலங்கையின் ரன் மளமளவென எகிறியது. சிறப்பாக ஆடிய இருவரும் சதம் விளாசினார். சதம் விளாசிய பிறகு இவர்களை ஆட்டமிழக்கச் செய்யலாம் என நினைத்த இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது, சதம் விளாசிய இருவரும் இரட்டைசதம் விளாசினர். ரோஷன் சற்று நிதானமாக ஆடினாலும், ஜெயசூர்யா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இரட்டை சதத்தை கடந்து ஜெயசூர்யா முச்சதத்தை விளாசினார்.


39 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி கடைசியில் 615 ரன்களில்தான் பிரிந்தது. கும்ப்ளே பந்தில் ரோஷஜ் 561 பந்தில் 27 பவுண்டரிகளுடன் 225 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் 340 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த ஜெயசூர்யா அவுட்டானார்.


புதிய வரலாறு படைத்த இலங்கை:


இந்திய அணிக்கு குடைச்சல் தந்த இருவரும் அவுட்டாகினர் என நினைத்த இந்திய அணிக்கு அடுத்தடுத்து சோதனையே காத்திருந்தது. 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டி சில்வா – கேப்டன் ரணதுங்கா ஜோடி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


சிறப்பாக ஆடிய அரவிந்த் டி சில்வா சதம் விளாசினார். ரணதுங்கா களமிறங்கியது முதலே ஒருநாள் போட்டி போல ஆடினார். சிறப்பாக ஆடிய ரணதுங்கா 86 ரன்களில் ரன் அவுட்டானார். ரணதுங்கா ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஜெயவர்த்தனேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியால் எதுவுமே செய்ய முடியாத நிலை போல அமைந்துவிட்டது. 600, 700, 800 என ரன்களை குவித்துக்கொண்டே போன இலங்கை அணி 900 ரன்களை கடந்துவிட்டது.


952 ரன்கள்:




59 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை உடைத்து டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் அதிக ரன்கள் என்ற புதிய வரலாறை படைத்தது இலங்கை அணி. அதற்கு முன்பு இங்கிலாந்து அணி 1938ம் ஆண்டு எடுத்த 903 ரன்களே அதிகம். 900 ரன்களை கடந்த பிறகும் நிற்காமல் இலங்கை வீரர்கள் ஆடினர். 1000 ரன்களை இலக்காக வைத்து ஆடியபோது ஜெயவர்த்தனே 66 ரன்களில் ஆட்டமிழக்க, 924 ரன்களை இலங்கை எட்டியபோது டி சில்வா 124 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கடைசியில் அந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான 5வது நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 952 ரன்களை  6 விக்கெட் இழப்பிற்கு எடுத்து டிக்ளேர் செய்திருந்தது.


532 ரன்களை குவித்த இந்திய அணிக்கு முன்பு 952 ரன்கள் என்ற உலக சாதனையை படைத்து கம்பீரமாக அந்த டெஸ்ட் போட்டியை இலங்கை டிரா செய்த நாள் கிரிக்கெட் வரலாற்றில் இன்று. இன்றளவும் இலங்கை அணியின் சாதனை யாராலும் நெருங்க முடியாத சாதனையாகவே உள்ளது.