ODI World Cup Records:   ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள ஐசிசியின் 13-வது உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனி நாடாக நடத்துகிறது. இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து 1987-ஆம் ஆண்டு மற்றும் 1996-ஆம் ஆண்டும், வங்காள தேசத்துடன் இணைந்து 2011-ஆம் ஆண்டும் இணைந்து தொடரை நடத்தியுள்ளது. உலகக்கோப்பைத் தொடங்கப்பட்ட காலம் முதல் இந்திய அணி கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள 12 உலகக்கோப்பைத் தொடரில் இரண்டு உலகக்கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. இதில் முதல் உலகக்கோப்பையை இந்தியா 1983-ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலும், அதன் பின்னர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையில் கோப்பையை வென்றது. 




இதில் முதலாவதாக வென்ற உலக்கோப்பை அப்போது மிகவும் பலமான அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை வென்றது. 1983-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்று உலகக்கோப்பைத் தொடரும் 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சார்பில், ஸ்ரீகாந்த் 38 ரன்களும், சந்தீப் பட்டேல் 27 ரன்களும், அமர்நாத் 26 ரன்களும் சேர்த்திருந்தனர். மற்றவர்கள் யாரும் சிறப்பாக விளையாடாததால், இந்திய அணி 54.4 ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 




அதன் பின்னர் மிகவும் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ரன்னை 30 ஓவர்களில் எட்டி கோப்பையை தனதாக்கிவிடும் என நினைத்துக்கொண்டு இருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணியை 140 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி.  இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேனான விவி ரிச்சர்ட்ஸின் கேட்சை கபில் தேவ் பின்னால் ஓடிச் சென்று பிடித்ததுதான். 


ரிச்சர்ட்ஸ் தனது விக்கெட்டை இழந்தபோது அவர் 28 பந்தில் 7 பவுண்டரி விளாசி 33 ரன்கள் சேர்த்திருந்தார். இந்தியா சார்பில், அமர்நாத் மற்றும் மதன் லால் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தனர். 




2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையினை இந்தியா கைப்பற்றியிருந்தாலும், இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் மற்ற நாடுகள் அனைத்தும் இருந்தது. குறிப்பாக இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இறுதிப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் சேர்த்தது. ஜெயவர்தனே 103 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 




இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களை வீழ்த்தினார் அசகாய சூரன் மலிங்கா. அதன் பின்னர் இந்திய அணி மெல்ல மெல்ல வலுவான நிலைக்கு முன்னேறியது. 3 விக்கெட்டுகள் இழந்த பின்னர் கம்பீர் மற்றும் தோனி இந்திய அணியினை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர். 97 ரன்கள் சேர்த்த நிலையில் பெராரா பந்து வீச்சில் கம்பீர் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் தோனியுடன் யுவராஜ் சிங் இணைந்தார். போட்டியின் 49-வது ஓவரின் 2-வது பந்தில் தோனி சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு இரண்டாவது உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.


இறுதிவரை களத்தில் இருந்த தோனி 91 ரன்கள் சேர்த்திருந்தார்.