உலகக் கோப்பை வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். பெங்களூருவில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக 94 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது இந்த உலகக் கோப்பை 2023ல் ரச்சின் ரவீந்திராவின் மூன்றாவது சதமாகும். 

ரவீந்திரா இதற்கு முன்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 116 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 123 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தார். 

சச்சினை பின்தள்ளிய ரச்சின்: 

ரச்சின் ரவீந்திரா தனது 23வது வயதில் உலகக் கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆவார். இதற்கு முன்னதாக, முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 23 வயதில் 2 உலகக் கோப்பை சதங்களை பதிவு செய்திருந்தார், ஆனால் தற்போது ரச்சின் ரவீந்திரன் சச்சின் டெண்டுல்கரை பின்தள்ளியுள்ளார். இது தவிர ரச்சின் ரவீந்திரா தனது பெயரில் மற்றொரு பெரிய சாதனையை படைத்துள்ளார்.

உண்மையில், நியூசிலாந்துக்காக உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா பெற்றுள்ளார். இதற்கு முன், உலகக் கோப்பையில் எந்த நியூசிலாந்து பேட்ஸ்மேனும் 3 முறை சதம் அடிக்கவில்லை.

மேலும், ரச்சின் ரவீந்திரா 23 வயது மற்றும் 321 நாட்களில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் சதம் அடித்த இளைய நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன்மூலம், 24 ஆண்டுகள் 152 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்திய முன்னாள் நியூசிலாந்து வீரர் நாதன் ஆஸ்டலின் சாதனையை ரவீந்திரா முறியடித்தார்.

உலகக் கோப்பை 2023-ல் ரச்சின் ரவீந்திரா செயல்திறன்: 

உலகக் கோப்பை 2023-ல் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பை 2023ல் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திரா இரண்டாவது இடத்தில் உள்ளார். ரச்சின் ரவீந்திரா இதுவரை 8 போட்டிகளில் 74.71 சராசரியில் 523 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர 3 போட்டிகளில் சதம் அடித்துள்ளார். 

யார் இந்த ரச்சின் ரவீந்திரா..?

நியூசிலாந்தின் வெலிங்டனில் இந்திய பெற்றோருக்கு மகனாக பிறந்தவர் ரச்சின் ரவீந்திரா. இவர் பேட்டிங்கை தவிர,  இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் கலக்கி வருகிறார். ரச்சின் ரவீந்திராவின் தந்தையான ரவி கிருஷ்ணமூர்த்தி, இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகர். இதனால் அவர் தனது மகனுக்கு ரச்சின் என்று பெயரிட்டார். ராகுலிடமிருந்து 'ரா' மற்றும் சச்சின் 'சின்'.

ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக அண்டர் 19 மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ரச்சினின் சர்வதேச அறிமுகமானது 2021 இல் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் நடந்தது.